Abstract:
க.பொ.த உயர்தரத்தில் கற்கும் மாணவர்களின் எதிர்பார்ப்பு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்வதே ஆகும். அந்த அடிப்படையில் உயர்தர கலைப்பிரிவில் பாடத் தெரிவில் விடும் தவறினால் பல்கலைக்கழக நுழைவானது பாதிக்கப்படுகின்றது. அந்த வகையில் க.பொ.த உயர்தர கலைப்பிரிவில் மாணவர்களுடைய பாடத்தெரிவினால் பல்கலைக்கழக நுழைவில் ஏற்படும் தாக்கத்தினை கண்டறியும் நோக்கில் இவ் அளவை நிலை ஆய்வானது அமையப்பபெற்றுள்ளது. ஆய்வுப் பிரதேசமாக மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை கோட்டம் தெரிவு செய்யப்பட்டது. இக் கோட்டத்திலுள்ள 21 பாடசாலைகளிலிருந்து நோக்க மாதிரியின் அடிப்படையில் கலைப்பிரிவு காணப்படுகின்ற LAB பாடசாலைகள் மூன்றும் 1C பாடசாலைகள் மூன்றும் தெரிவுசெய்யப்பட்டன. மேலும் மாதிரிகளாக 06 பாடசாலைகளின் அதிபர்கள் 06 பேரும் கலைப்பிரிவிற்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் நோக்க மாதிரியின் அடிப்படையில 52 பேரும் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் 2021(2022)ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கலைப்பிரிவில் பரீட்சைக்குத் தோற்றி பரீட்சையில் சித்தியடைந்தும் பல்கலைக்கழத்துக்கு தெரிவு செய்யப்படாத 115 மாணவர்களும் நோக்க மாதிரித் தெரிவு மூலம் செய்யப்பட்டனர். மாதிரிகளிடமிருந்து தரவுகளைப் பெறுவதற்காக வினாக்கொத்து, நேர்காணல, ஆவணங்கள் என்பன பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் பெறப்பட்ட அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகள் அனைத்தும் Microsoft Excel ஐப் பயன்படுத்தி ஆய்வு நோக்கங்கள் மற்றும் வினாக்கள் என்பவற்றிற்கேற்ப பகுப்பாய்வு செய்யப்பட்டு அவை அட்டவணைகள், வரைபுகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டு கலந்துரையாடல் செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. அந்த அடிப்படையில் பாடத்தெரிவுக்கும் பல்கலைக்கழக நுழைவிற்குமிடையில் தொடர்பு காணப்படுகின்றது. பாடத்தெரிவில் விடும் தவறினால் பல்கலைக்கழக நுழைவில் தாக்கம் ஏற்படுகின்றது. மற்றும் சரியான பாடத்தெரிவின்மையால் அதிகளவிலான மாணவர்கள் பல்கலைக்கழத்துக்கு தெரிவாகாத நிலை காணப்படுகின்றமை போன்ற முடிவுகள் பெறப்பட்டன. இதனடிப்படையில் பாடத்தெரிவின்போது மாணவர்கள் எதிர்கொள்ளுகின்ற சிக்கல்கலைக் குறைப்பதற்காகவும் சிறந்த பாடத்தெரிவினூடாக பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பை பெறுவதற்குமான
விதப்புரைகள் முன்மொழியப்பட்டுள்ளன.