dc.description.abstract |
தற்காலச் சூழலில் கல்விச் செயன்முறைகளில் பல்வேறு புதுமைகள் ஏற்பட்ட வண்ணமுள்ளன. அந்தவகையில் பாடசாலைகளில் வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயன்முறையின் நவீன வடிவமாக திறன் வகுப்பறைகள் காணப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் செயன்முறையில் ஈடுபட வேண்டிய தேவை ஆசிரியர்களின் மத்தியில் காணப்பட்ட போதிலும் அவற்றைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தலை மேற்கொள்வதில் ஆசிரியர்களின் ஈடுபாடு எவ்வாறான நிலையில் உள்ளது என்பதைக் கண்டறியும் நோக்கில் இவ் ஆய்வு இடம்பெற்றுள்ளது. இவ் ஆய்வினை மேற்கொள்வதற்காக பதுளை மற்றும் பசறை கல்வி வலயங்களுக்குட்பட்ட திறன் வகுப்பறை வசதிகள் காணப்படும் 6 தமிழ்மொழி மூலப் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. ஆய்வு மாதிரிகளாக 6 அதிபர்களும், சிரேஷ்ட இடைநிலை வகுப்புக்களுக்கு கல்வி கற்பிக்கும் 80 ஆசிரியர்களிலிருந்து ஆண், பெண் எனப் படையாக்கம் செய்யப்பட்டு அதிலிருந்து இலகு எழுமாற்று மாதிரித்தெரிவின் அடிப்படையில் 2:1 என்ற அடிப்படையில் 40 ஆசிரியர்களும், சிரேஷ்ட இடைநிலையிலுள்ள 1177 மாணவர்களிலிருந்து ஆண், பெண் என படையாக்கம் செய்யப்பட்டு பின்னர் இலகு எழுமாற்று மாதிரித்தெரிவின் அடிப்படையில் 10:1 என்ற விகிதத்தில் 118 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மாதிரிகளிடமிருந்து தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக வினாக்கொத்து, நேர்காணல் படிவம் மற்றும் ஆவணச்சான்றுகள் போன்ற ஆய்வுக்கருவிகள் பயன்படுத்தபட்டுள்ளன. இவற்றின் மூலமாகப் பெறப்பட்ட அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகள் பொருத்தமான Excel முறைமையூடாக பகுப்பாய்வு, வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டதுடன் இப் பகுப்பாய்வின் மூலம் பல்வேறு முடிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன. அவை முறையே ஆசிரியர்கள் மத்தியில் திறன் வகுப்பறையைப் பயன்படுத்தி வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயன்முறைகளை முன்னெடுப்பதில் அவர்களின் ஈடுபாடு ஒப்பிட்டளவில் குறைவாகவே காணப்படுகிறது. இதற்குக் காரணங்களாக அவர்களிடையே நிலவும் அலட்சியப்போக்கு, விருப்பமின்மை, ஏனைய ஆசிரியர்களினுடைய ஒத்துழைப்பின்மை, கற்பித்தலுக்கான நேரம் போதாமை போன்ற பல்வேறு காரணங்கள் இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு இனங்காணப்பட்ட காரணங்களை இழிவளவாக்கி வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயன்முறைகளில் திறன் வகுப்பறையைப் பயன்படுத்துவதில் ஆசிரியர்களின் ஆர்வத்தினை அதிகரிப்பதற்கான விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |