Abstract:
“உள்ளடங்கல்" கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வகுப்பறையில் சாதாரண மாணவர்களுடன் இணைந்த வகையிலே விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் ஒரே மட்டத்தில், கற்றல்-கற்பித்தல் நிகழும்போது பல சவால்கள் எழுகின்றன. அந்த வகையில் மெல்லக் கற்கும் மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஆசிரியர்கள் முன்னெடுக்கும் செயற்திட்டங்களையும்,அவற்றை முன்னெடுப்பதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் இனங்கண்டு அவற்றை இழிவளவாக்குவதற்கான ஆலோசனைகளையும், விதப்புரைகளையும் முன்வைப்பதே இவ் ஆய்வின் நோக்கமாக அமைகிறது. "ஆரம்பப்பிரிவின் மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்"என்னும் தலைப்பில் அமைந்த இந்த அளவை நிலை ஆய்வானது, பட்டிருப்பு கல்வி வலய மண்முனை தென்எருவில் பற்று கல்விக்கோட்டத்திலுள்ள ஆரம்பப்பிரிவினை மையமாகக் கொண்டு இடம்பெற்றுள்ளது. ஆய்வுப் பிரதேசமாக மண்முனை தென்எருவில் பற்று கல்விக்கோட்டம் ஆய்வாளரால் தெரிவு செய்யப்பட்டது. இந்த கல்விக் கோட்டத்திலுள்ள 37 பாடசாலைகளிலிருந்து 07 பாடசாலைகளும், அப்பாடசாலையின் 07 அதிபர்களும், ஆரம்பப்பிரிவிற்கு கற்பிக்கின்ற 46 ஆசிரியர்களும் 2023 ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில் 70க்கு குறைந்த புள்ளிகளைப் பெற்ற 41 மாணவர்களின் 06 பெற்றோர்களின் தொடர்பினை ஆய்வாளனால் பெற்றுக்கொள்ள முடியாததினால் ஏனைய 35 பெற்றோர்களும் நோக்க மாதிரியின் படி தெரிவுசெய்யப்பட்டனர்.இவ் ஆய்வில் வினாக்கொத்து,நேர்காணல், அவதானம் ஆகிய ஆய்வுக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தரவுகள் பெறப்பட்டு அவை பண்புரீதியான மற்றும் அளவு ரீதியான பகுப்பாய்வு செய்யப்பட்டு வியாக்கியானமும் கலந்துரையாடலும் இடம்பெறுகின்றது. தரவுகளின் பகுப்பாய்வுக்காக Microsoft Excel பயன்படுத்தப்பட்டது. தரவு பகுப்பாய்வு முறை மூலம் பெறப்பட்ட இவ் ஆய்வின் முடிவுகளின் பிரகாரம், மெல்லக்கற்போருக்கு கற்றலில் அதிக ஈடுபாடின்மை.. போதிய கற்பித்தல் வளங்கள் இன்மை, கற்பித்தலின்போது நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படாமை, புலமைப்பரீட்சை தொடர்பாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அழுத்தம், மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான விசேட கற்பித்தல் பற்றிய போதிய அறிவு இன்மை, பெற்றோர்களின் பங்களிப்பின்மை, போன்ற பல பிரச்சினைகளும், கண்டறியப்பட்டுள்ளன. பெற்றோர்களின் முழு ஆதரவினை வழங்குதல், விசேட கலைத்திட்டத்தின்படி ஆசிரியர்களுக்கான போதிய பயிற்சிகளையும் அது தொடர்பான வழிகாட்டல்களையும் வழங்கும் போது ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சலால்களை இழிவளவாக்குவதற்கான விதப்புரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.