Abstract:
இலங்கையில் நடைமுறையில் உள்ள கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாணவர்கள் கட்டாயக் கல்வியை பெறுவது அவசியமாகும். அந்தவகையில் பெருந்தோட்டப்புற பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் கட்டாயக் கல்வியை நிறைவு செய்வதில் எதிர்கொள்ளும் சாவல்களை கண்டறிந்து அதற்கான ஆலோசனைகளை முன்வைத்தல் எனும் பொதுநோக்கின் அடிப்படையில் இவ்வாய்வானது மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாய்விற்காக நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் மூன்றில் உள்ள 41 பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தரங்களை கொண்ட தமிழ்மொழி மூல பாடசாலைகள் என்ற நோக்க மாதிரியின் அடிப்படையில் 10 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டது. இவற்றில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளிலிருந்து நோக்க மாதிரி அடிப்படையில் 10 அதிபர்களும், க.பொ.த சாதாரண தரத்திற்கு கற்பிக்கும் 152 ஆசிரியர்களில் 5:1 விகிதத்தில் 30 ஆசிரியர்களும், 7:1 என்ற விகிதத்தில் 111 மாணவர்களும் படையாக்கப்பட்ட இலகு எழுமாற்று மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட 111 மாணவர்களில் 5:1 என்ற விகிதத்தின் அடிப்படையில் 22 பெற்றோர்களும் தெரிவு செய்யப்பட்டனர். பொதுநோக்கிற்கு அமைவாக வினாக்கொத்து, நேர்காணல், ஆவணங்கள் போன்ற ஆய்வுக் கருவிகளின் ஊடாக பெறப்பட்ட அளவு மற்றும் பண்பு ரீதியான தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கு MsExcel மூலம் அட்டவணைகள், வரைவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெறப்பட்ட முடிவுகளை இலக்கிய மீளாய்வோடு ஒப்பிட்டு கலந்துரையாடல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தரவு பகுப்பாய்வு மூலம் குடும்ப வருமானம் சகபாடிகளின் தொடர்பு. தொழில் மீதான ஆர்வம், வெகுஜன ஊடகங்கள், வளப்பற்றாக்குறை, அதிபரின் முறையற்ற தலைமைத்து செயற்பாடுகள், ஆசிரிய மாணவ தொடர்பு, கற்பித்தலில் நெகிழ்ச்சியற்றத்தன்மை, மலையக மக்களின் தொழில்முறை என்பன கட்டாயக் கல்வியை நிறைவுச் செய்வதில் பெருந்தோட்டப்புற பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களாக இனங்காணப்பட்டு முடிவுகள் பெறப்பட்டதுடன் அதற்கான விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.