Abstract:
பாடசாலைகளில் மாணவர்களின் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் பேணுவதில்
பாடசாலைகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன. மகிழ்ச்சிகரமான
பாடசாலைச் சூழலைப் பேணுவதில் சுகாதார வளங்களின் பங்களிப்பு முக்கியமானது.
இந்நிலையில் மலையகப் பாடசாலைகளில் சுகாதார வளங்கள் எவ்வாறு
காணப்படுகின்றன என்பதையும் அதன் மூலம் மகிழ்ச்சிகரமான பாடசாலைச் சூழலைப்
பேணுவதற்கான வழிமுறைகளையும் கண்டறியும் நோக்கில் இவ்வாய்வு
மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கொத்மலைக் கல்வி வலயத்தின் கொத்மலைக்
கல்விக் கோட்டத்தில உள்ள 42 தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் கல்வி கற்கும்
தரம் 10,11 மாணவர்களை மையப்படுத்தியதாக இவ்வாய்வு இடம்பெற்றுள்ளது.
இதற்காக கொத்மலைக் கல்வி கோட்டத்தில் தரம் 10,11 வகுப்புக்களை உள்ளடக்கிய
17 பாடசாலைகளில் இருந்து 9 பாடசாலைகள் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்டன.
அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் 9 அதிபர்களும் நோக்க மாதிரி
அடிப்படையிலும் தரம் 10, 11 மாணவர்களை ஆண், பெண் என படையாக்கம் செய்து
பின்னர் இலகு எழுமாற்று மாதிரித் தெரிவின் மூலம் 10:1 என்ற விகிதத்தில் 86
மாணவர்களும் தரம் 10,11 வகுப்புக்களுக்கு கற்பிக்கின்ற 130 ஆசிரியர்களை ஆண்,
பெண் படையாக்கம் செய்து 50 சதவீத ஒதுக்கீட்டு மாதிரி அடிப்படையில் 63
ஆசிரியர்களும் இனங்காணப்பட்டு அவர்களிடமிருந்து வினாக்கொத்து மற்றும்
நேர்காணல், அவதானம் என்பவற்றின் மூலமாக தரவுகள் பெறப்பட்டன. பெறப்பட்ட
அளவுசார், பண்புசார் தரவுகள் அனைத்தும் ஆய்வு நோக்கங்களை அடைந்து
கொள்ளும் விதமாகவும் ஆய்வு வினாக்களுக்கு விடை காணும் வகையிலும்
Microsoft Excel
ஊடாக பகுப்பாய்வு செய்யப்பட்டன. இதற்கமைய பெறப்பட்ட
முடிவுகள் பின்வருமாறு அமைந்தன. மகிழ்ச்சியான பாடசாலைச் சூழலைப் பேணுவதில்
சுகாதார வளங்களின் பங்களிப்பு அவசியமானது எனவும் நடைமுறையில் மலையகப்
பாடசாலைகளில் சுகாதார வளங்களில் குறைபாடுகள் நிலவுகின்றது எனவும்
இக்குறைபாடுகளானது பெருமளவு மாணவர்களுடைய வரவில் தாக்கத்தை
ஏற்படுத்துகிறது எனவும் முடிவுகள் கண்டறியப்பட்டன. இதன் அடிப்படையில்
மகிழ்ச்சிகரமான பாடசாலைச் சூழலைப் பேணுவதில் பாடசாலைகள் செயல்பட
வேண்டிய விதங்களும் மற்றும் பாடசாலையில் சுகாதாரம் மேம்பாட்டு திட்டத்தை
வலுப்படுத்தி நடைமுறைப்படுத்தி அதனூடாக வெற்றிகரமான மகிழ்ச்சிகரமான
பாடசாலைச் சூழலை உருவாக்குவதற்குரிய விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.