Abstract:
சமூகத்திற்கு பொருத்தமான திறமை கொண்ட மாணவர்களை உருவாக்குவதில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இதனடிப்படையில் "வினைத்திறனான வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் ஆசிரியர்களின் நிலைமாற்று வகிபாகத்தின் செல்வாக்கு" எனும் தலைப்பின் கீழமைந்த இவ் அளவைநிலை ஆய்வானது மாணவர்களின் வினைத்திறனான வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் ஆசிரியர்களின் நிலைமாற்று வகிபாகத்தை கண்டறிந்து அவற்றை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை முன்மொழிதல் எனும் பொது நோக்கத்தையும் அதற்கான சிறப்பு நோக்கங்களையும் உள்ளடக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வு பிரதேசத்திலுள்ள மொத்த தமிழ் பாடசாலைகள் 41ல் எழுமாற்று அடிப்படையில் 10 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. இவற்றில் LAB பாடசாலைகள் ஒன்றும். 1C பாடசாலைகள் ஆறும், வகை II பாடசாலைகள் மூன்றும் உள்ளடங்குகின்றன. நோக்க மாதிரியின் அடிப்படையில் 10 அதிபர்களும், ஆண், பெண் என்று படையாக்கம் செய்யப்பட்டு பின் இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 2:1 எனும் விகிதத்தில் 72 ஆசிரியர்களும், 10:1 எனும் விகிதத்தில் 118 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டு அவர்களிடம் வினாக்கொத்து, நேர்காணல், குழு கலந்துரையாடல், அவதானம், ஆவணம் போன்ற ஆய்வு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் தரவுகள், தகவல்கள், பெறப்பட்டு இவை பண்பு ரீதியாக மற்றும் அளவு ரீதியாக Microsoft Excell ஊடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு வியாக்கியானமும், கலந்துரையாடலும் இடம்பெறுகிறது. தரவு பகுப்பாய்வு முறை மூலம் பெறப்பட்ட ஆய்வு முடிவுகளாக வளப்பற்றாக்குறை, குறைவான கருத்தரங்குகள், பயிற்சிகள், போதிய விளக்கமின்மை, ஆசிரியர்களின் மனநிலை, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரிய ஆலோசகர்களின் குறைவான ஒத்துழைப்பு, நேரம் போதாமை, வழிகாட்டல்கள், ஆலோசனைகள் குறைவு. எல்லா பாடங்களுக்கும் பொருந்தாமை போன்ற பல பிரச்சினைகள் இனங்காணப்பட்டதோடு வினைத்திறனான வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் ஆசிரியர்களின் நிலைமாற்று வகிபாகத்தின் செல்வாக்கு குறைவாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே நிலைமாற்று வகிபாகத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும், அதற்கு சலாவாக இருக்கும் காரணிகளை குறைக்கும் வகையிலும், காலத்திற்கேற்ப ஆசிரியர்கள் தமது கற்றல் கற்பித்தலில் பல்வேறு வகிபங்குகளுடன் தொழிற்பட வேண்டும் என்பதையும் விதப்புரைகளினூடாக இவ்வாய்வில் முன்வைக்கப்பட்டுள்ளன.