dc.description.abstract |
இன்றைய காலகட்டத்தில் பாடசாலைகளில் மாணவர் சுய கற்றலானது
இன்றியமையாததாகவே காணப்படுகின்றது. அதற்காக பாடசாலைகளால் பல்வேறு
செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஆனால் தற்காலத்தில் பாடசாலைச்
சமூகமானது மாணவர் சுயகற்றலுக்காக எத்தகைய செயற்பாடுகளை
முன்னெடுக்கின்றது என்பது தொடர்பில் கூறமுடியாத நிலையேயுள்ளது. இதனை
அடிப்படையாகக் கொண்டு 'தரம் 10, 11 மாணவர்களின் சுய கற்றலினை
மேம்படுத்துவதில் பாடசாலைச் சமூகத்தின் பங்களிப்பு" என்ற ஆய்வு
தொனிப்பொருளினூடாக ஹாலிஎல கல்விக் கோட்ட பாடசாலைகளில் தரம் 10, 11
உள்ளடங்கிய 13 பாடசாலைகளில் 7 பாடசாலைகள் எழுமாறாக தெரிவு செய்யப்பட்டு
ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. 7 பாடசாலைகளிலும் தரம் 10, 11 மாணவர்கள் 853
பேரில் ஆண், பெண் எனப் படையாக்கப்பட்டு, இலகு எழுமாற்று மாதிரியின்
அடிப்படையில் 10:1 என்ற விகிதத்தில் 85 மாணவர்களும், மாணவர்களின்
எண்ணிக்கையிலிருந்து இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 2:1 என்ற
விகிதத்தில் 42 பெற்றோர்களும் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் பல்லின தன்மை கொண்டவர்களாக
காணப்படுவதால்
ஒவ்வொருவரையும் ஆய்வு மாதிரியில் பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக 7
பாடசாலைகளிலுள்ள 220 ஆசிரியர்களில் ஒதுக்கீட்டு மாதிரியின் அடிப்படையில் 25
சதவீதமான, 55 ஆசிரியர்கள் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், 7
பாடசாலைகளின் அதிபர்களும் நோக்க மாதிரியின் அடிப்படையிலும்,
அப்பாடசாலைகளில் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களில் ஒரு பாடசாலைக்கு
இருவர் வீதமும் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டு, ஆய்வின் நோக்கம், ஆய்வு
வினாக்களுக்கு அமைவாக தரவுகள் சேகரிக்கப்பட்டு Microsoft Excel இன் ஊடாக
பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு வரைவுகள், அட்டவணைகள் மூலமாக விவரணம்
செய்யப்பட்டு அதனூடாக முடிவுகளும் பெறப்பட்டுள்ளன. மாணவர்களின் சுய
கற்றலை மேம்படுத்துவதில் பாடசாலைச் சமூகத்தின் பங்களிப்பானது குறைவாகவே
காணப்படுகின்றது என்பதும் முடிவாகவும் பெறப்பட்டுள்ளதுடன், இதனடிப்படையில்
மாணவர் சுய கற்றலை மேம்படுத்துவதற்காக பாடசாலை சமூகத்தினால்
மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளும்
விதப்புரைகளாக வழங்கப்படும் வகையில் இவ்வாய்வானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. |
en_US |