Abstract:
இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பாடமானது கலைத்திட்டதில் 2006ம் ஆண்டில் தரம் 10 இல் தெரிவுப்பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பாடமானது மாணவர்களது கல்வியறிவை மேம்படுத்தி தொழில்நுட்ப உலகின் சவால்களை வெற்றிகொள்ள உதவுகிறது. எனினும் இப்பாடத்தினைத் தெரிவு செய்யும் மாணவர்களது எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. அந்தவகையில் இவ் ஆய்வானது "பாடசாலைகளில் தரம் 10 இல் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தெரிவை மேற்கொள்வதில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்" என்னும் தலைப்பினைக் கொண்டு அமைகிறது. தரம் 10 இல் ICT பாடத்தை அதிகளவான மாணவர்கள் தெரிவு செய்யாமைக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்குரிய ஆலோசனைகளை முன்வைப்பதாக அமைந்துள்ளது. அதனடிப்படையில் இந்நோக்கத்தினை அடைந்துகொள்வதற்காக பொலன்னறுவை மாவட்டத்தில், திம்புலாகலைக் கல்வி வலயத்தில் உள்ள, திம்புலாகலைக் கல்விக் கோட்டத்தில் உள்ள 31 பாடசாலைகளில், விருப்புத்தெரிவு பாடங்களில், ICT பாடங்கள் கற்பிக்கப்படும் 9 பாடசாலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வு மாதிரிகளாக இப்பாடசாலைகளின் 9 அதிபர்களும், ICT பாட ஆசிரியர்கள் 10 பேரும் நோக்க மாதிரி தெரிவின் அடிப்படையிலும், தரம் 10, 11 இல் கல்வி கற்கும் மாணவர்களில் இருந்து ஆண், பெண் என படையாக்கம் செய்து பின் இலகு எழுமாற்று தெரிவினூடாக 6:1 என்ற அடிப்படையில் 136 மாணவர்களிடமிருந்து தரவுகளைப் பெறுவதற்கான ஆய்வுக்கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல் முறை பயன்படுத்தப்பட்டன அளவுரீதியாகவும், பண்புரீதியாகவும் பெறப்பட்ட தரவுகள் Ms Office Excel ஊடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, அட்டவணைகள், உருக்கள் என்பற்றின் மூலம் வகைக்குறிக்கப்பட்டு விபரணப்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து மாணவர் மனநிலை, குடும்பச் சூழல், பாடசாலையில் ICT பாட ஆசிரியர் இன்மை, போதிய வளம் இன்மை, விழிப்புணர்வு ICT பாடப் பரீட்சை சரியானமுறையில் இடம்பெறாமை போன்றனவும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தெரிவை மேற்கொள்வதில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளாகக் கண்டறியப்பட்டன. ICT பாடத்தை 6-11 வரை கட்டாய பாடமாக்க வேண்டும், ICT பாட பரீட்சைகளை 6-9ற்கு முறையாக நடாத்துதல், ICT பாடம் தொடர்பான விழிப்புணர்வை ஆசிரியர், மாணவர், பெற்றோருக்கு நடத்துதல், நவீன கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் நவீன முறையிலான கற்பித்தலை மேற்கொள்ளல் போன்ற விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டன.