Abstract:
பாடசாலையின் வினைத்திறனான முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கு தகவல் வளம்
மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. பாடசாலைகளில் கல்வி
முகாமைத்துவத் தகவல் தொகுதியினை சரியான முறையில் பின்பற்றிக்கொள்ளும்
அதிபர்களின் முகாமைத்துவம் வினைத்திறன் மிக்கதாகக் கருதப்படுகின்றது.
ஆகையால் கல்வி முகாமைத்துவத் தகவல் முறைமைக்கூடாகத் தகவல்களை
ஆவணப்படுத்தி வைப்பதன் முக்கியத்துவத்தைக் கண்டறியும் நோக்கில் இவ்வாய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக காலி கல்வி வலயத்தின் காலி கல்விக்
கோட்டத்தில் உள்ள தமிழ்மொழிமூலப் பாடசாலைகள் அனைத்தும் தெரிவு
செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வு மாதிரிகளாக அதிபர்கள்,
SMC உறுப்பினர்கள், SDEC உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் தெரிவு
செய்யப்பட்டுள்ளனர். அதிபர்கள் மற்றும் SMC உறுப்பினர்கள் அனைவரும்
நோக்கமாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு SDEC யில் அங்கம்
வகிக்கும் உறுப்பினர்கள் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள்.
வலயக்கல்விப்பிரதிநிதி எனப் படையாக்கம் செய்யப்பட்டு அவர்களுள் ஒரு பிரிவில்
இருந்து ஒருவர் என்ற அடிப்படையில் 09 பாடசாலைகளில் இருந்தும் ஆசிரியர்கள் 09
பேரும், பெற்றோர் 09 பேரும் பழைய மாணவர்கள் 09 பேருமாக 27 பேர் இலகு
எழுமாற்று மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு வலயக்கல்விப்
பிரிதிநிதி ஒருவராகையால் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு.
28 உறுப்பினர்கள் மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டதோடு, ஆசிரியர்கள் ஆண்,
பெண் எனப்படையாக்கம் செய்யப்பட்டு 41 என்ற விகித அடிப்படையில் இலகு
எழுமாற்று மாதிரித்தெரிவின் மூலம் 85 பேர் தெரிவு செய்யப்பட்டு, வினாக்கொத்து,
நேர்காணல் படிவம், குவியக்குழுக் கலந்துரையாடல் படிவம், அவதானிப்புப் படிவம்
போன்ற ஆய்வுக்கருவிகள் மூலம் தரவுகள் திரட்டப்பட்டு, பெறப்பட்ட அளவுசார்
மற்றும் பண்புசார் தரவுகள் Microsoft Excel ஐப் பயன்படுத்திப் பொருத்தமான
அட்டவணைகள். வரைபுகள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள்
கண்டறியப்பட்டுள்ளன. அதில் பாடசாலைகளில் தகவல்வள முகாமைத்துவச்
செயற்பாடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படாமையும், தகவல் தொழிநுட்பத்தில்
தேர்ச்சி பெற்ற ஆளணியினர் மற்றும் கணிணி வசதிகள் இன்மையும், பாடசாலையில்
முன்னெடுக்கும் முகாமைத்துவச் செயற்பாடுகள் நிகழ்காலத் தகவல்களை
அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படாமையும் கண்டறியப்பட்டு,
பாடசாலையுடன் தொடர்புடைய தகவல்கள் EMIS மூலம் ஆவணப்படுத்துவதன்
அவசியத்தைத் தெளிவுபடுத்தி, வினைத்திறனான பாடசாலை முகாமைத்துவச்
செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய வகையில் விதப்புரைகள் முன்வைக்கப்பட்டன.