Abstract:
இருமொழிக் கல்வி முறையானது பரவலாகப் பாடசாலைகளில் கற்பிக்கப்படுகிறது. இதனைத் தெரிவுசெய்து கற்கின்ற மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனினும் இருமொழிக் கல்வியை மேற்கொள்ளும் போது ஆசிரியர்களும் மாணவர்களும் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இவ்வாய்வின் முக்கியமான நோக்கம் இருமொழிக் கல்வியூடாக விஞ்ஞானப் பாடத்தைக் கற்கின்ற கனிஷ்ட இடைநிலை மாணவர்களின் கற்றலின் ஈடுபாட்டுத் தன்மையைக் கண்டறிதல் என்பதாக உள்ளது. இதற்காக மண்முனை வடக்கு கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இருமொழியில் விஞ்ஞானக் கல்வியை வழங்கக்கூடிய 6 பாடசாலைகளிலுள்ள கனிஷ்ட இடைநிலைப்பிரிவு மாணவர்களில் ஆண், பெண் என படையாக்கப்பட்டு இலகு எழுமாற்று மாதிரியைக் கொண்டு 2:1 என்ற அடிப்படையில் 65 மாணவர்களும், நோக்க மாதிரியின் அடிப்படையில் 6 விஞ்ஞானப் பாட ஆசிரியர்களும், மற்றும் 6 அதிபர்களும் தெரிவுசெய்யப்பட்டதுடன், ஆய்வு வினாக்கள் தயாரிக்கப்பட்டு வினாக்கொத்து, நேரடி அவதானம் மற்றும் நேர்காணல் மூலமாக தரவுகள் சேகரிக்கப்பட்டன. அத்தரவுகள் யாவும் சிறப்பு நோக்கங்களுக்கு அமைவாக மாதிரிகளிடம் இருந்து பெறப்பட்ட அளவு மற்றும் பண்பு ரீதியான தரவுகளை Microsoft Excel மூலம் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு வியாக்கியானம் கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக முடிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன. முடிவுகளிலிருந்து நியமன ரீதியாக இருமொழி மூலமாக விஞ்ஞானத்தைக் கற்பிக்கக்கூடிய ஆசிரியர்கள் குறைவாக உள்ளனர். அனுபவபூர்வமாக நவீன சாதனங்களைக் கொண்டு கற்பிக்கின்ற விதமும் குறைவாக இருப்பதுடன், இருமொழி மாணவர்களுக்கான வள ஒதுக்கீட்டிலும் சமத்துவமின்மையும் காணப்படுகின்றது. முகாமைத்துவ மட்டத்திலான ஒத்துழைப்பும் இருமொழிக் கல்விக்கு குறைவாகவே வழங்கப்படுகின்ற தன்மையும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்விடயங்கள் இருமொழியில் விஞ்ஞானப் பாடத்தைக் கற்கும் மாணவனின் பாட ஈடுபாட்டிலும் தாக்கமேற்படுத்துகின்றது. இதனடிப்படையில் இச்சவால்களைக் குறைத்துக் கொள்ளக் கூடிய வகையில் விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன