Abstract:
பாடசாலைக்கும் சமூகத்துக்கும் இடையிலான தொடர்பு பாடசாலையின் வினைத்திறனுக்கு இன்றியமையாததாகும். அதற்கமைவாக பாடசாலைக்கும் சமூகத்துக்கும் இடையிலான தொடர்பினை வலுவூட்டுவதற்காக 2018 ஆம் ஆண்டிலிருந்து EPSI நிகழ்ச்சி திட்டம் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் இத்திட்டத்தின் கீழ் பாடசாலைக்கும் சமூகத்துக்கும் இடையிலான தொடர்பினை பேணுவதில் அதிபர்கள் பல சவால்களினை எதிர்கொள்கின்றனர். அவ்வாறான சவால்களினை கண்டறியும் நோக்கில் இவ் அளவை நிலை ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக பதுளை கல்வி வலயத்திற்குட்பட்ட ஹாலிஎல கல்விக் கோட்டத்திலுள்ள 30 பாடசாலைகளில் எழுமாறாக 7 பாடசாலைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, 07 அதிபர்களும் 08 பிரதி அதிபர்களும் நோக்க மாதிரி அடிப்படையிலும், 224 ஆசிரியர்களில் 56 ஆசிரியர்கள் 25% ஆன ஒதுக்கீட்டு மாதிரியிலும், 7 பாடசாலைகளிலும் தரம் 10,11 மாணவர்கள் 880 பேரில் ஆண், பெண் என படையாக்கப்பட்டு இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 20:1 என்ற விகிதத்தில் 44 மாணவர்களின் பெற்றோர்களும், 7 பாடசாலைகளிலும் பழைய மாணவர் சங்கத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் 14 பழைய மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆய்விற்கான தரவு சேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல் படிவம், ஆவணச் சான்றுகள் போன்றன பயன்படுத்தப்பட்டு, வினாக்கொத்து மூலம் பெறப்பட்ட அளவுசார் தரவுகளும், நேர்காணலினூடாக பெறப்பட்ட பண்புசார் தரவுகளும் Microsoft Excel மூலம் பகுப்பாய்வு, வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டதுடன் பகுப்பாய்வின் மூலம் பல்வேறு முடிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன. அதனடிப்படையில் வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சி திட்டத்தில் சமூகத் தொடர்பாடலைப் பேணுவதில் சமூகத்துக்கும் பாடசாலைக்கும் இடையிலான தொடர்பு சேய்மையாக காணப்படுதல், இத்திட்டத்தின் கீழ் சமூகத்தினருக்கு மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் முறையாக சமூகத்தினரை சென்றடையாமை, ஆசிரியர்களுக்கு EPSI நிகழ்ச்சி திட்டத்தில் சமூகத்தின் பங்களிப்பு தொடர்பான பூரண விளக்கம் காணப்படாமை, பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் பாடசாலையுடன் நெருங்கிய தொடர்பினை பேணாமை போன்ற முடிவுகளும், பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பினைப் பேணுவதற்கு அதிபர் உரிய முறையில் EPSI திட்டத்தின் கீழ் சமூக சார் செயற்பாடுகளை மேற்கொள்ளல் மற்றும் சமூகத்தினரை பாடசாலைக்குள் ஒன்றுபடுத்தி தமது செயற்பாடுகளை முன்னெடுத்தல் போன்ற விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.