Abstract:
இலங்கையில் அனைவருக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதற்கு மாணவர்களின் ஆரம்பக்கல்வி அவசியமான ஒன்றாகக் காணப்படுகிறது. இந்த வகையில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை பிரபல பாடசாலைகளுக்கு அனுமதிப்பதில் போட்டித் தன்மை காணப்படுகின்றது. இதனை எடுத்தியம்புவதாக "தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான கல்விச்சட்டக்கொள்கைகளும் அவற்றின் நடைமுறைப் பொருத்தப்பாடுகளும்” எனும் தலைப்பிலான இவ் அளவைநிலை ஆய்வானது 2023ல் உள்வாங்கப்பட்ட தரம் ஒன்று மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. யாழ் மாவட்டதில் வலிகாம வலயத்தின் சண்டிலிப்பாய் கோட்டத்தில் உள்ள IAB, IC, வகை II மற்றும் வகை Ⅲ பாடசாலைகள் தரத்தின் அடிப்படையில் படையாக்கப்பட்டு 20 சதவீத ஒதுக்கீட்டு மாதிரியில் 06 பாடசாலைகளும் அதிபர்கள் (06), பழைய மாணவர் சங்கப்பிரதிநிதிகள் (06) இலகு எழுமாற்று மாதிரி அடிப்படையிலும் பெற்றோர்கள் 221 பேர் 4 அலகு தூரத்திற்கமைய (54) படிமுறை எழுமாற்று மாதிரி மூலம் தெரிவு செய்து வினாக்கொத்து, நேர்காணல், ஆவணம் மூலமாக அவர்களிடமிருந்து அளவு மற்றும் பண்பு ரீதியாக தரவுகள் பெறப்பட்டுள்ளன. இவை எண் சதவீத அளவீட்டு முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தரவுகள் யாவும் தரம் ஒன்று மாணவர் அனுமதி தொடர்பான கல்விச்சட்டக்கொள்கைகள், அவற்றின் நடைமுறைகள், நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சவால்கள், அவற்றை இழிவளவாக்குவதற்கான ஆலோசனைகள் போன்ற ஆய்வு நோக்கத்தின் அடிப்படையில் அளவு. பண்பு ரீதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. பாடசாலைக்கு மாணவர்களை அனுமதிப்பதில் காணப்படும் சுற்றுநிரூபத்தினை முறையாக பின்பற்றுவது குறைவாகக் காணப்படுகிறது. இதன்படி வகுப்பறையில் அதிக மாணவர், போலி ஆவணங்கள், நிதிச் சுரண்டல், லஞ்சம், வகுதிகளை நடைமுறைப்படுத்தாமை. பிரபல பாடசாலைகளின் செல்வாக்கு போன்ற முடிவுகளுக்கு. சுற்றுநிரூபத்திற்கமைவாக மாணவர்களை உள்வாங்கல், வகுப்பறையில் 35 மாணவர்களைக் கொண்டிருத்தல், விண்ணப்பிக்கும் வகுதிகளை கவனத்திற் கொள்ளல், நேர்முகப் பரீட்சைகளில் வெளிப்படைத் தன்மையை பேணல், பெற்றோரின் பங்களிப்பை ஊக்குவித்தல், பெற்றோர்களிடம் இருந்து நிதி பெறுவதைத் தவிர்த்தல், போன்றவற்றை ஏற்படுத்துவதனூடாக இப்
பிரச்சினைகளைக் குறைக்கலாம் போன்ற விதப்புரைகளும் இவ்வாய்வில்
வழங்கப்பட்டுள்ளன.