dc.description.abstract |
இன்றைய சமூகத்தை அச்சப்பட வைக்கும் விடயங்களில் ஒன்றாக சிறார் குற்றங்கள் காணப்படுகின்றன. ஏனெனில் "இன்றைய சிறார்களே நாளைய தலைவர்கள்" என்று கூறுவதற்கமைய அவர்களை நன்னடத்தை மற்றும் சீரிய ஒழுக்கமுள்ளவர்களாகவும் உருவாக்குவது அவசியமாகும். குடும்பச்சூழல் மற்றும் பின்னணி காரணமாக சரியான கவனிப்பு இல்லாத சிறார்கள் பிறழ்வான நடத்தையை வெளிப்படுத்துகிறார்கள். இச்சிறார் குற்றமானது தற்கால சூழலில் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. அத்தோடு குற்றச் செயல் புரிவதனால் சீரதிருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டு மீள சமூகத்திற்குள் வரும் போது சமூகத்தோடு மீள இணைவதென்பது கடினமாக அமைகிறது.
ஆகையால் இவ்வாய்வானது வவுனியா பிரதேசத்திலே எவ்வகையான சிறார் குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றது என்பதையும் அதற்கான காரணங்களிலும் கவனம் செலுத்துவதோடு அவர்கள் எவ்வாறான சவால்களை சமூகத்தில் எதிர்கொள்கிறார்கள் என்பதையும் அறிவதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் சிறார்கள் களவு, போதைப் பொருள் கடத்தல் மற்றும் பாவனை, குடிப்பழக்கம், வீணான சச்சரவு போன்றவற்றில் அதிகம் ஈடுபடுவதாகவும் பெற்றோரின் கவனிப்பின்மை, குடும்பத்தில் வன்முறை, பெற்றோர் பிரிவு, தவறான நட்பு பழக்கம் என்பன அதற்கு காரணமாக அமைந்துள்ளன என்பதும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தவறான நடத்தை காரணமாக சீர்திருத்த நிறுவனங்களில் மறுவாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுவர்கள் மீள சமூகத்திற்குள் வரும்போது சமூகத்தின் தவறான கண்ணோட்டம், நண்பர்களின் புறக்கணிப்பு, குடும்பத்தினரிடம் இடைவினை இல்லமை, எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாதல் போன்ற விடயங்களால் சமூக ஒருங்கிணைவில் தடைகளை எதிர்கொள்வதை அறியக்கூடியதாக உள்ளது. அத்தோடு சமூகத்தின் தவறான கண்ணோட்டத்தை இல்லாமல் செய்வதன் மூலமாகவும் பெற்றோரை குழந்தைகளை சரியாக வளர்க்க ஆற்றுப்படுத்தல் போன்றவற்றின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும். |
en_US |