Abstract:
இனத்துவ யுத்தத்தினை 2009 இல் முடிவுக்கு கொண்டு வந்து பல வருடப் பூர்த்தியினை இலங்கை கொண்டாடினாலும் இலங்கையில் பல சமுதாயங்களின் மத்தியில் இனரீதியான வன்முறைகள் அதிகம இடம் பெற்றுக்கொண்டு வருகின்றது என்பதை புறம் தள்ள முடியாது. இலங்கையின் முஸ்லிம் சமூகம் 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இனப் பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறையை அனுபவித்து வருகின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், தண்டனைகளின்றி தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கும்பல் தாக்குதல்களிலிருந்து பரிணமித்தது எனலாம்.இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு ஒன்றும் புதிதல்ல என்றாலும், சமீபத்திய ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான இந்நிலைமை கூர்மையடைந்துள்ளது எனலாம், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், அதிகார தரப்பின் மறைமுக அங்கீகாரத்துடன் அடிக்கடி பல்வேறு ஆபத்தான அளவுகளில் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் "இலங்கையில் இனவாதமும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையும்: 2018 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் திகன பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறையை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஆய்வு" எனும் தலைப்பில் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் வன்முறையினை அடிப்படையாகக் கொண்டு பேரினவாத குழுக்களினால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறையின் விளைவுகள் எத்தகையது என்பதனையும்,அதனால் முஸ்லிம் சமூகம் எவ்வாறு பாதிப்படைந்துள்ளது என்பதனை விளக்கும் விதமாகவும் அதற்கு எவ்வாறான தீர்வுகள் அவசியம் என்பதனை அடிப்படையாகக் கொண்டும் இவ்வாய்வு அமைந்துள்ளது.
அத்துடன் இவ்வாய்வுக்கு தெரிவு செய்யப்பட்ட திகன பிரதேசத்தில் உள்ள திகன வன்முறையினால் பாதிப்படைந்த முக்கியமான ஐந்து கிராம சேவகர் பிரிவுகளை தெரிவு செய்து. அந்த பிரிவுகளில் உள்ள மொத்த மக்கள் தொகையில் எல்லா இனத்தவர்களையும் அடிப்படையாகக் கொண்டு,நோக்க மாதிரியின் அடிப்படையில் தரவுகள் சேகரிக்கப்பட்டன.இத்தரவு சேகரிப்புகளுக்காக வினாக்கொத்து மற்றும் நேர்காணல்,குழு கலந்துரையாடல் என்பவற்றின் ஊடாக தரவுகள் பெற்றுக் கொள்ளப்பட்டு பகுப்பாய்வு செய்து முடிவுகளும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாய்வானது மொத்தமாக ஐந்து அத்தியாயங்களை கொண்டுள்ளது முதல் அத்தியாயம் ஆய்வு முன்னொழியாகவும், இரண்டாவது அத்தியாயம் கோட்பாட்டு விளக்கம் மூன்றாவது அத்தியாயம் ஆய்வு பிரதேசம் தொடர்பான விளக்கங்கள்,நான்காவது அத்தியாயம் ஆய்வு தொடர்பான தரவு சேகரிப்பு பகுப்பாய்வு முடிவுகளும் மற்றும் ஐந்தாவது அத்தியாயம் ஆய்வு கோட்பாட்டு பரிசீலனை, கருதுகோல் பரிசீலனை, ஆய்வு பிரச்சினை, பரிந்துரை மற்றும்,முடிவுரை என்ற அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதுடன், ஆய்வுக்கு தரவு
சேகரிப்புக்காக மேற்கொள்ளப்பட்ட பின்னிணைப்புகள் என்பவற்றுடன் உசாத்துணைகள்
போன்ற விடயங்களை உள்ளடங்களாக கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டு
ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.