Abstract:
பகிடிவதை என்பது இலங்கையின் அரச பல்கலைக்கழக அமைப்பில் காணப்படும் ஒரு ஆழமான நீண்ட கால சமூக நடைமுறையாகும். மாணவர்களின் உடல், உளவியல். சமூக, அறிவாற்றல் மற்றும் நடத்தை அம்சங்களில் எதிர்மறையான, தீங்கு விளைவிக்கும் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, 1998 ஆம் ஆண்டின் எண். 20, கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் பிற வன்முறைத் தடைச் சட்டத்தின் கீழ் இது தண்டனைக்குரிய குற்றமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
பகிடிவதை மற்றும் பாலியல் ரீதியிலான வன்முறையானது பெரிதும் ஆணாதிக்க சிந்தனையின் ஊடாக கட்டமைக்கப்பட்டு பரவல் அடைகின்றது. அதேவேளை பெண்களை அடிமைப்படுத்தும் கருவியாகவும் பாலியல் வன்முறைகள் கையாளப்படுகின்றன. இவ்வாறான பகிடிவதை பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சிரேஷ்ட, கனிஷ்ட மாணவ பிரிவுகளின் ஏற்றத்தாழ்வுகளினை மையப்படுத்திய மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
முரண்பாட்டுக் கோட்பாட்டின் அடிப்படையில் கிழக்குப் பல்கலைக்கழத்தில் சிரேஷ்ட மாணவர்கள் தமது நோக்கம், தனிப்பட்ட விருப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பலம் குறைந்த, நலிவுற்ற புதுமுக மாணவர்கள் மீது அதிகாரப் பாங்கான அடக்குமுறைகளினை பின்பற்றுகின்றனர். அதாவது சிரேஷ்ட மாணவர்கள் கனிஷ்ட மாணவர்களினைக் காட்டிலும் அதிகாரம் கொண்டவர்கள் எனும் அடிப்படையில் பகிடிவதை எனும் பெயரில் தமக்குக் கீழ் அடிமைப்படுத்தி விடுகின்ற தன்மையினைக் காண முடிகிறது.
இதனால் புதுமுக மாணவர்களின் மனங்களிலும் செயல்களிலும் பண்பு ரீதியாக சில மாற்றங்களைக் கொண்டு வருவது என்ற எல்லையை கடந்து அவர்களுடைய தனிமனித கௌரவம், பால்நிலையிலான சுயமரியாதை என்பவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பகிடிவதைகள் அமைந்துவிடுகின்றன