Abstract:
ஏகாதிபத்தியம் என்ற சொல் மிக முக்கியமாகப் பேசப்படுகின்ற ஒன்றாக உள்ளது. ஏகாதிபத்திய நன்மைகளை அனுபவிப்பதற்காக நாடுகள் ஏகாதிபத்திய மூலங்களை கையாண்டு வருகின்றன. அமெரிக்காவின் ஏகாதிபத்தியமானது டொலர் நாணய அரசியலைக் கொண்டு முன்னெடுக்கப்படும் அதேவேளை உலக நாடுகளை சவால்களுக்கும் உட்படுத்தி வருகின்றது. எனவே தான் டொலர் மேலாதிக்கத்தால் நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கருத்திற் கொண்டு அதற்கு எதிராக மாற்று நாணயமாக யூரோ செயற்படுவதன் சாத்தியப்பாட்டை கண்டறிவது இவ்வாய்வின் நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்விற்கான தரவுகள் இரண்டாம் நிலைத் தரவு மூலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது. காலனித்துவ காலத்தின் முடிவுக்குப் பின்னர் ஏகாதிபத்திய ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது. இன்று மறைமுக உத்திகளைக் கொண்ட ஏகாதிபத்திய ஆதிக்கம் பரந்துபட்டதாகக் காணப்படுவதுடன் அதன் விளைவுகளும் ஏராளமானதாக உள்ளன. இதன் விளைவுகளைக் கருத்திற் கொண்டு ஐரோப்பிய ஒன்றிய சூழலை மையமாகக் கொண்டு, இந்த ஆய்வு உலகளாவிய பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் பகுதிகளில் அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தின் பன்முக பரிமாணங்களையும். ஐரோப்பிய ஒன்றியத்தின் பணவியல் மற்றும் நிதி சுயாட்சிக்கான அடுத்தடுத்த சாத்தியப்பாட்டை கண்டறிவதாக உள்ளது. இந்த ஆய்வு விபரணப் பகுப்பாய்வு அணுகுமுறையைப் பயன்படுத்தி அமெரிக்க டொலரின் மேலாதிக்கத்தை முதன்மை இருப்பு நாணயமாக உறுதிப்படுத்திய வரலாற்று, பொருளாதார மற்றும் அரசியல் அடிப்படைகளை ஆராய்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரக் கொள்கைகள் வர்த்தக உறவுகள் மற்றும் பரந்த புவிசார் அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றில் இந்த மேலாதிக்கத்தின் தாக்கத்தையும் ஆராய்கின்றது. மேலும் இந்த ஆய்வு டொலருக்கு எதிரான நாணய அரசியல் முயற்சியை கொண்டு நடாத்துவதில், ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலோபாய முன்முயற்சிகளை தெளிவுபடுத்துகின்றது. அதன் நாணயக் கொள்கைகளை பல்வகைப்படுத்துதல், யூரோவின் பங்கை வலுப்படுத்துதல் மற்றும் அமெரிக்க டொலரைச் சார்ந்திருப்பதைத் தணித்தல். டொலர் மேலாதிக்கத்தால் முன்வைக்கப்படும் சவால்களை வழிநடத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிகளை இது ஆராய்கின்றது. மேலும் பலதரப்பட்ட மற்றும் நெகிழ்ச்சியான சர்வதேச யூரோ நாணய அமைப்பை வளர்ப்பதற்கான வழிகளை பரிந்துரைக்கின்றது.