Abstract:
ஒரு ஜனநாயக நாட்டில் உள்ள சகல மக்களுக்கும் சமமான வகையில் அரசியலில் பங்குபற்றுவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கை போன்ற மூன்றாம் மண்டல நாடுகளில் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ பாதிப்பிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் அரசியலில் பங்குபற்றுவதானது மிகவும் அரிதானதாகவே காணப்படுகின்றது. இதற்கான முக்கிய காரணமாக வாக்களிப்பு வசதிகள் சரியான முறையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் பதுளை மாவட்ட பதுளைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 29 கிராம சேவகர் பிரிவுகளில் இம்மாற்றுத்திறனாளிகளது மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்குரிமை வசதிகளை மையப்படுத்தி இவ்வாய்வு இதன்படி ஆய்வுப்பிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்குத் தடையாக உள்ள காரணிகள், மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக உள்ள கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், மாற்றுத்திறனாளிகளின் வாக்களிப்பினை அதிகரிக்க எவ்வாறான விடயங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பவற்றைக் கண்டறிவதனையும் இவ்வாய்வு நோக்கங்களாகக் கொண்டுள்ளது. இந்நோக்கங்களை அடைந்து கொள்ளும் பொருட்டு முதலாம் நிலைத் தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக மாற்றுத்திறனாளிகள், தேர்தல் திணைக்கள அதிகாரிகள், தேர்தல் கடமைகளில் ஈடுபட்டோர், சமூக நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் போன்றோரிடம் வினாக்கொத்து, கள ஆய்வு, நேர்காணல் போன்றவற்றின் மூலமாகவும், இரண்டாம் நிலைத் தரவுகள் நூல்கள், சஞ்சிகைகள், ஆய்வறிக்கைகள், இதழ்கள், அறிக்கைகள், இணையம் மற்றும் கையேடுகள் என்பவற்றின் மூலமும் பெற்றுக்கொள்ளப்பட்டன. மேலும் இவ் ஆய்வானது நிகழ்தகவு மாதிரிகளில் ஒன்றான எளிய எழுமாற்று மாதிரியெடுப்பினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதுளைப் பிரதேச செயலகத்தினை முழு ஆய்வுப்பிரதேசமாகவும் கொண்டு 29 கிராம சேவகர் பிரிவுகளை மையப்படுத்தினாலும் சிறப்பாக பதுளைப் பிரதேச செயலாளர் பிரிவில் 150 மாதிரி நபர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் Excel விரிதாள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு விபரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஆய்வுப்பிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாக்குரிமை வசதிகள் பற்றாக்குறையாக உள்ளதனை இனங்காணக்கூடியதாக இருந்தது. எனவே இவ்வாறான பிரச்சினைகளைக் களைந்து அவர்களுக்கான வாக்களிப்பு வசதிகளைச் செய்து கொடுப்பதனூடாக அவர்களது
வாக்களிப்பு வீதத்தினை அதிகரிக்கலாம் என்ற ரீதியில் இவ்வாய்வானது
மேற்கொள்ளப்பட்டுள்ளது.