Abstract:
குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் வாழும் மக்கள் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட மூன்றாம் மட்ட அரசாங்கமாகவே உள்ளூராட்சி மன்றங்கள் செயற்படுகின்றன. இவ்வுள்ளூராட்சி மன்றங்கள் மூலமே சேவை வழங்கலை இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. உள்ளூராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்டாலும் சேவை வழங்கலைப் பெற்றுக் கொள்ளும் உள்ளூர் பிரதேச மக்கள் பின்தங்கிய நிலையிலே உள்ளனர். உள்ளூராட்சி மன்றங்களின் சேவை வழங்கலைப் பெற்றுக் கொள்வதில் மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. அந்தவகையில், அம்பாறை மாவட்டத்தில் உள்ளடங்கும் உள்ளூராட்சி மன்றங்களில் ஒன்றான கல்முனை மாநகரசபையின் நிர்வாகத்திற்கு கீழுள்ள சாய்ந்தமருது பிரதேச மக்கள் தமக்கென தனியான உள்ளூராட்சி சபையினைப் பெற்றுத்தருமாறு சுமார் 35 வருடங்களாக கோரி வருகின்றனர். கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது மக்கள் சேவை வழங்களில் ஓரங்கட்டப்படுகின்ற நிலை தொடர்வதால் சாய்ந்தமருதுக்கென தனியான பிரதேச சபையின் அவசியப்பாடு தொடர்பாக மக்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புக்கள் காணப்படுகின்றன. உள்ளூராட்சி மன்றத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு சாத்தியமான பல விடயங்கள் காணப்பட்டாலும் அவற்றை அடைந்து கொள்வதில் பல இடர்களை எதிர்நோக்குகின்ற தன்மையே காணப்படுகின்றது. கோரிக்கைக்கான தீர்வு கிடைக்கப்பெற்று அதன் மூலமாக சாய்ந்தமருதை அபிவிருத்தி செய்வதை நோக்காகக் கொண்டு பல ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் சாய்ந்தமருது மக்கள் முன்னெடுத்தனர். ஆனால் பொருளாதார பலம், அரசியல் செல்வாக்கு. அரசியல் சுயநலம் போன்ற பல்வேறு காரணங்கள் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தடையாக அமைகின்றன. குறிப்பாக அரசியல் தலைவர்கள் தங்களது வாக்குகளை தக்க வைத்துக் கொள்வதற்காக சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபை வழங்கப்படும் போது கல்முனையில் முஸ்லிம்களின் ஆதிக்கம் இழந்து தமிழர்களின் ஆதிக்கம் மேலோங்கும் என்ற விடயத்தை கல்முனை முஸ்லிம்கள் மத்தியில் விதைத்து வருகின்றனர். அந்தவகையில் நிர்வாக பரவலாக்கம் என்ற கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை தொடர்பான நியாயங்கள், அரசியல் தலையீடுகள் போன்றனவும் சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படும் போது சாய்ந்தமருதில் ஏற்படக்கூடிய சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் மற்றும் கல்முனை
மாநகர சபையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்பனவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது