Abstract:
சர்வதேச அரசியலில் அதிகாரத்திற்கான போராட்டம் என்பது தொடர் நிகழ்வாகக் காணப்படும் ஒன்றாகும். அந்தவகையில் இன்று பரவலாக உலக அரங்கில் பேசப்பட்டு வரும் விடயமாக சிரியாவின் உள்நாட்டுப் போர் காணப்படுகின்றது. 1946 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து சிரியா பல்வேறு உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றது. இவ் உள்நாட்டு யுத்தம் தொடங்கி 12 வருடங்கள் ஆனாலும் அவ் யுத்தம் இன்னும் முவுக்கு கொண்டுவரப்படவில்லை. காரணம். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஒரு வல்லரசாக மாறுவதில் அமெரிக்கா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் சிரிய யுத்தத்தை தமது அதிகாரச் சமனிலைக்கான யுத்த களமாக மாற்றியுள்ளமையேயாகும். அத்துடன் அமெரிக்காவும் ரஸ்யாவும் சிரியாவை மையமாகக் கொண்டு போட்டியிடுவது உலக சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகக் காணப்படுகின்றது. மேலும் ரஸ்யாவின் தலைமையில் ஈரான், சீனா ஆகிய நாடுகள் அசாத் ஆட்சியை காப்பாற்றுவதை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது. அமெரிக்காவின் தலைமையில் சவூதி அரேபியா, துருக்கி, கட்டார். இஸ்ரேல் ஆகிய நாடுகள் அசாத் ஆட்சியை வீழ்த்துவதை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது. மேலும் ரஸ்யா தமது நலன்களை சிரியாவில் பாதுகாப்பதற்கு அசாத் ஆட்சி அவசியம் என்பதை வலியுறுத்துகின்றது. அதேநேரம் அமெரிக்கா அசாத் ஆட்சியை வீழ்த்தி தமக்கு இசைவான ஆட்சியை ஏற்படுத்த போராடி வருகின்றது. இதனால் அமெரிக்கா மற்றும் ரஸ்யாவிற்கிடையிலான மோதல் வளர்கின்ற அதேநேரம் பிராந்திய நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போராட்டத்தையும் தூண்டியுள்ளது. அத்துடன் சிரியாவில் காணப்படும் கிளர்ச்சியாளர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்குலகம் செய்து அசாத் ஆட்சிக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றது. இதனால் சிரியாவின் உள்நாட்டு யுத்தமானது சர்வதேச போட்டிக் களமாக பரிணாமமடைந்து இன்றுவரை தொடர்வதாகக் காணப்படுகின்றது. அந்தவகையில் அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்குமிடையிலான அதிகாரச் சமனிலைக்கான யுத்தத்தில் சிரிய விவகாரம் எவ்வாறு கையாளப்படுகின்றது என்பது தொடர்பானதாகவே இவ்வாய்வு அமைகின்றது. அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்குமிடையிலான போட்டியானது சர்வதேச ஒழுங்கில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது. அமெரிக்கா மற்றும் ரஸ்யாவின் புவிசார் அரசியல் மற்றும் பிராந்திய நலன்கள் யாவை. அமெரிக்க, ரஸ்யா ஆகிய நாடுகளின் இராஜதந்திர இராணுவ மற்றும் கொள்கை உத்திகள் எவை, பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இவ்விரு நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் எவை போன்றவை இவ்வாய்வின் விசாரணைகளாகும். பிரதான நோக்கமாக சிரிய உள்நாட்டுப் போர்ச் சூழலில் அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையே வளர்ந்து வரும் அதிகாரப் போட்டி மற்றும் இராணுவ, இராஜதந்திர கொள்கை உத்திகளை ஆராய்வதாகவுள்ளது. இவ்வாய்வு ஒரு விவரண ரீதியான ஆய்வாகக் காணப்படுவதுடன், இரண்டாம் நிலைத் தரவுகளை மையப்படுத்தியதாகவே காணப்படுகின்றது