Abstract:
ஒரு நாட்டின் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதில் உள்ளூராட்சி அமைப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. இலங்கையில் மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை என்ற மூன்று வகையான உள்ளூராட்சி அமைப்புக்கள் உள்ளன. இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உள்வாங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ள போதிலும், பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னமும் குறைவாகவே உள்ளது. இவ் ஆய்வானது வெலிமடைப் பிரதேசத்தில் சகோதர இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் பிரதிநிதிகள் காணப்படுகின்ற போதிலும் கூட எந்தவொரு தமிழ்ப் பெண் பிரதிநிதித்துவமும் இல்லை என்பதனை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டும், இப்பிரதேசத்தில் தமிழ்ப் பெண் பிரதிநிதித்துவம் இன்மைக்கான காரணங்களை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முதலாம் மற்றும் இரண்டாம் நிலை தரவு சேகரிப்பு முறைகளை பயன்படுத்தி அளவுசார் மற்றும் பண்புசார் ஆய்வு முறைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக வினாக்கொத்து (74), நேர்காணல் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வின் பெறுபேறுகளாக உளவியல், பொருளாதார, கலாசார மற்றும் குடும்ப சூழல், அரசியலில் பெண்களுக்கு ஆர்வமின்மை, சிறுபான்மையினராக காணப்படுகின்றமை என்ற மனோ நிலை, ஒரு சில கட்சிகளை தவிர னைய கட்சிகளில் பிரதிநிதியாக போட்டியிட சந்தர்ப்பம் வழங்காமை, பெண்களுக்கு பெண்களே வாக்களிக்க முன்வராமை, விழிப்புணர்வின்மை போன்ற காரணங்களால் தமிழ்ப் பெண்களின் பிரதிநிதித்துவமும் அரசியல் பங்குப்பற்றலும் இல்லை எனக் கண்டறியப்பட்டது. இவ் ஆய்வு தமிழ்ப் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான ஆலோசணைகளை முன்வைக்கின்றது.