Abstract:
பல்லின மக்களும் Unto வாழுகின்ற மட்டக்களப்பில் பல்வேறு தொழில் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முறை பற்றி மட்டக்களப்பு பூர்வசரித்திரம் விபரிக்கின்றது. இப்பொருளாதார நடவடிக்கைகளுள் பண்டைய காலந்தொட்டு தற்காலம் வரை விவசாயப் பொருளாதாரத்தின் நிலை குறித்து ஆராய்வதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். வரலாற்று அணுகுமுறையினூடாக விவசாயப் பொருளாதார முறைகள் ஆராயப்பட்டுள்ளது. அதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில் நேர்காணல், அவதானம் செய்யப்பட்டும் மற்றும் நூல்கள், சஞ்சிகைகள், அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரைகள் மூலமாகப் பெறப்பட்ட பண்புசார் தரவுகளினூடாக வியாக்கியானம் செய்யப்பட்டும் முடிவுகளும் பெறப்பட்டுள்ளது. ஆரம்ப காலந்தொட்டு விவசாயத்தை விருத்தி செய்வதில் மன்னர்கள் தொடக்கம் அந்நிய காலனித்துவவாதிகள் வரை பாரியபங்குவகித்துள்ளனர். அதேபோன்று தற்காலத்திலும் விவசாயச் செய்கைகளுக்காக ஆட்சியாளர்கள் பல திட்டங்களை அறிமுகஞ்செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதோர் விடயமாகக காணப்படுகின்றது. வேளாண்மைத் தொழிலானது பண்டைய மட்டக்களப்பு பகுதிகளில் வாழ்ந்த மக்களின் பொருளாதாரத்தை கட்டமைக்கின்ற தொழிலாக மட்டும் காணப்படவில்லை, விவசாயத்தை தெய்வீகத் தன்மை பொருந்திய, வாழ்க்கை முறை கலாசாரமும் பண்பாடும் இணைந்த ஒரு சமூகவியல் நடவடிக்கையாகவே அவர்களால் பேணப்பட்டு வந்துள்ளது என்பதற்கும் அவர்கள் மேற்கொண்ட சடங்குமுறைகளும் சான்றுபகர்கின்றன. இவ்விவசாயச் செய்கை முறைகள் பண்டைய காலந்தொட்டு தற்காலம் வரை பாரிய பொருளாதாரத்தை ஈட்டும் துறையாக இருந்து வருகின்றது. பாரம்பரியமும், தனித்துவமும் கொண்டு விளங்குகின்ற இவ்விவசாயத் துறையானது ஆரம்ப காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த நடைமுறையில் இருந்து தற்காலத்தில் மக்கள் பின்பற்றும் நடைமுறைகளில் சில மாற்றங்களைக் கண்டுள்ளது எனக் கூறலாம். இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் வேளாண்மைச் செய்கை முறை செய்யப்படுகின்ற போதும் மட்டக்களப்பு பிரதேசத்திலே இவை பண்டைய காலந்தொட்டு பாரம்பரியமான முறையில் சமய நம்பிக்கைகளுடன் பின்பற்றப்படுகின்றமை அதன் தனித்துவத்தைக் காட்டிநிற்கின்றன எனலாம். இவ்வாய்வின் மூலமாக பண்டைய காலம் முதல் தற்காலம் மட்டக்களப்பில் பல்வேறு பொருளாதார வடிவங்கள் காணப்படுகின்ற போதிலும் வேளாண்மைப் பொருளாதாரமே பிரதான வருவாயைப் பெற்றுக் கொள்ளும் பொருளாதாரமாக பாரம்பரிய நடைமுறைகளுடன் பின்பற்றப்பட்டு
வருகின்றது என்பது தெளிவாகின்றது.