Abstract:
தென்னாசியாவில் இலங்கையானது நீண்ட கால தொடர்ச்சியான வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்ட நாடாக விளங்குகின்றது. இலங்கையின் இந்து சமய வழிபாட்டில் ஆலயங்களில் தமிழ் பண்பாட்டு பாரம்பரிய அம்சங்கள் பரவலாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அவ்வம்சங்களுள் ஒன்றாக குடிவழி மரபுகள் விளங்குகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களின் வரலாற்று பின்னணியிலும் உறவு பாரம்பரியத்திலும் குடிவழி வழக்கு முறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருவது பிரிக்கமுடியாத உன்னத உறவின் ஆதாரங்கள் என்றால் மிகையாகாது. ஒரு சமூகத்தின் மரபுகள், வழக்காறுகள் போன்றன அதன் தனித்துவத்தை எடுத்துரைக்கின்றது. இவ்வாறான விடயங்களை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு பேணிப் பாதுகாத்துக் கொண்டு செல்வதென்பது ஒவ்வொரு சமூகத்தின் பிரதான கடமையாகும். இவ்வாறான சமூகங்களின் பண்புகள் எதிர் கால சந்ததிகளுக்கு வரலாற்று பொக்கிஷமாக காணப்படுகின்றது என்றே In B வேண்டும். அந்தவகையில் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஏறாவூர் பிரிவில் உள்ள ஸ்ரீ பத்திர காளி அம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் ஆலயத்தில் குடிவழிகளின் செல்வாக்குகள் தொடர்பாக முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை தவிர்த்து நடுநிலையான ஓர் வரலாற்றினை வெளிப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் இவ்விரு ஆலயங்களிலும் குடிமுறைமைகள் தொடர்பான ஓர் ஒப்பீட்டினை அடிப்படையாகக் கொண்டுள்ளது அதாவது ஏறாவூர் ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலயத்தின் தல வரலாறு, சடங்குகளும் பூஜை விதிமுறைகளும், ஆலய நிருவாகம், கோயிற் சமூகமான விஸ்வகம்மியர்கள் போன்ற விடயங்களுடன் ஆலய நடவடிக்கைகளில் குடியினரின் பங்களிப்புக்கள் என்றவாறாக ஸ்ரீ பத்திர காளி அம்மன் ஆலயத்தின் வரலாறு எடுத்துக்காட்டப்பட்டள்ளது. அதேபோல் வீரபத்திரர் ஆலயத்தில் ஆலயத்தின் தோற்றம், பூஜைகள், வருடாந்த உற்சவம், கோயிற் சமூகமான முற்குவர்கள். ஆலய நிருவாகம் மற்றும் ஆலய நிருவாக நடவடிக்கைகளிலும், ஏனைய செயற்பாடுகளிலும் குடியினரின் வகிபங்குகள் என்பன இவ்வாய்வில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. ஆரம்ப காலங்களில் ஸ்ரீ பத்திர காளி அம்மன் ஆலயத்தில் குடி வழமைகள் என்பது இன்றியமையாததொன்றாக விளங்கியது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நாகரீக வளர்ச்சிப் பாதையில் விஸ்வகம்மியர்கள் தங்களின் குடி மரபை மறந்து ஆலய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். மரபுகள் ரீதியாக தங்களுக்குள் கடைபிடித்து வந்த பாரம்பரியங்களையும் தற்கால சூழலில் காலத்திற்கு ஏற்றாற் போல் மாற்றி வருகின்றார்கள் என்பது கண்கூடு, அதே சமயம் அதே பிரதேசத்தில் உள்ள வீரபத்திரர் ஆலயத்தில் அன்று தொடக்கம் இற்றை வரை குடி மரபுகள் தொடர்பாக பல பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அக்குடியினர் தங்களால் இயன்ற அளவிற்கு தமது பாரம்பரியமான அடையாளங்களை தற்காத்து வருகின்றார்கள்.