Abstract:
ஆரம்ப காலங்களில் நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் சமுதாயமாக வாழ்வதற்கு முற்பட்டமையினால் பல்வேறு தொழிற்பிரிவுகளாகப் பிரிந்து குலங்களைத் தோற்றுவித்துள்ளனர். இவ்வாறு தோற்றம் பெற்ற சமூகங்களிலிருந்தே சாதி அல்லது குலமும் அதிலிருந்து குடிகளும் தோற்றம் பெற்றுக் கொண்டன. இதன்படி கோவில்போரதீவுப் பிரதேச மக்களிடையே நிலவுகின்ற குடிவழித்தோன்றல்களின் தொன்மை, ஆலய நிர்வாகத்தில் அவர்களின் வகிபாகத்தினை கண்டறிவதே இவ்வாய்வின் நோக்கமாகும். வரலாற்று அணுகுமுறையினூடாக கோவில்போரதீவுப் பிரதேசத்தின் குடிவழிகள் மற்றும் ஆலய நிர்வாகத்தில் அவர்களது வகிபாகம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுடன் அதற்காக கோவில்போரதீவு பிரதேசவாழ் மக்களிடம் நேர்காணல் அவதானம் செய்யப்பட்டு நூல்கள், சஞ்சிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் மூலம் பெறப்பட்ட பண்புசார் தரவுகளினூடாக வியாக்கியானம் செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இவ்வாய்வினூடாக கோவில்போரதீவுப் பிரதேசத்தின் குடிவழித் தோன்றல்கள் நீண்டகாலமாக அப்பிரதேசத்தின் சமூகம் மற்றும் பொருளாதாரத்திலும், ஆலய நிர்வாகக் கட்டமைப்பிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன என்பதனையும், சமூகத்தில் காணப்படுகின்ற பிரதான குடிகளின் மேலாதிக்கமானது ஏனைய குடிகளின் மீது செல்வாக்குச் செலுத்தியிருந்தமையினையும், அது தற்காலம் வரையிலும் நீடித்து நிலைத்துள்ளமையினையும், ஒவ்வொரு குடியினருக்குமான மரபுகளும், பாரம்பரியங்களும் அவர்களின் வாழ்வியல் அம்சங்களில் பிரதிபலிக்கப்படுவதனையும் தெளிவாகக் கண்டறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. இதன்படி தமிழ் மக்களிடையே காணப்படும் குடிவழி முறையானது கோவில்ப்போரதீவுப் பிரதேசத்தில் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.