Abstract:
இலங்கைக்கு கி.மு மூன்றாம் நூற்றாண்டளவில் அறிமுகமான பௌத்த சமயம் தீவின் அனைத்து மக்களிடையிலும் பரவிக்கொண்டது. அதிலும் குறிப்பாக புராதன காலத்திலிருந்து தமிழர்களும் இச் சமய நெறியை பின்பற்றியுள்ளனர். இதனாற்தான் கிழக்கிலங்கை பகுதியில் குறிப்பாக திருகோணமலையில் தமிழ்ப் பௌத்தம் நிலவியமைக்கான சான்றுகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. வரலாற்று அணுகுமுறையினூடாக தமிழ் மக்களிடையே பௌத்தத்தின் தோற்றம் வளர்ச்சி ஆராயப்பட்டுள்ளது. ஆய்வின் வரையறை கருதி இலங்கையின் மத்திய காலப்பகுதியை மையப்படுத்தியதாக இவ்வாய்வு அமைகின்றது. இன்றைய நிலையில் தமிழர்களில் பெரும்பான்மையோர் இந்துக்களாகவும் சிங்களவர்களில் பெரும்பான்மையோர் பௌத்தர்களாகவும் இருக்கின்றனர். இந்நிலையானது பௌத்த மத எச்சங்கள் காணப்படுகின்ற இடங்கள் ஓர் இனத்திற்குரியதாக பார்க்கப்படுகிறது. ஆனால் போதனை நெறியாக பௌத்தம் அறிமுகமானபோது இனம், மொழி கடந்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இங்கு வாழ்ந்த தமிழர்கள் பத்தாம் நூற்றாண்டுகளிலும் பௌத்த சமயக் கொள்கையை பின்பற்றி தமிழ் பௌத்தர்களாக இருந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தல் இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வில் திருகோணமலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்ச் சாசனங்கள், திராவிடக் கட்டிடக் கலைப்பாணியை தழுவிய வெல்கம் விகாரை, மற்றும் சிற்பங்கள் என்பன அவதானிக்கப்பட்டு இவ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய காலப்பகுதியில் வெல்கம் விகாரைக்கு தமிழர்கள் தானம் வழங்கியமை பற்றிய ஆறு தமிழ்ச்சானங்களை காணக்கூடியதாக உள்ளது. இராஜராஜப் பெரும்பள்ளியின் இந்துக்கோயில் பாணியிலமைந்த சுற்றுப்பிரகார சிறுகோயில் படிமாகரங்கள், அடித்தள விகாரத்தில் திராவிடக் கலைநுட்பம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று மயிலன் குளம் பகுதியில் வேளைக்காற தமிழ்ப் படைகளின் பொறுப்பில் பௌத்த விகாரை காணப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது. மாங்கனாய் தமிழ்ச் சாசன ஓம்படைக்கிளவியில் குறிப்பிடப்படும் புத்தர், விநாயகர் ஆகிய தெய்வங்கள் ஊடாக இந்து, பௌத்த சமய நல்லிணக்கம் வெளிப்படுத்தப்படுகின்றது. மத்திய கால திருகோணமலை பௌத்த விகாரைகளில் சோழர் கலைப்பாணியிலமைந்த பௌத்த சமயச் சிலைகள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.