Abstract:
இலங்கையானது மிகவும் தொன்மையான வரலாற்றைக் கொண்ட நாடாகும். இதன்
நீண்டகால வரலாற்றில் பல இராசதானிகள் வெளிநாடுகளுடன் வர்த்தக உறவை
பேணிவந்தமைக்கு துறைமுகங்கள் முக்கிய காரணமாய் அமைந்தன. அந்தவகையில்
அநுராதபுர இராசதானி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு வர்த்தகத்தில்
பண்டைய துறைமுகங்களின் செல்வாக்கானது நூற்றாண்டு காலத் தொன்மைமிக்கது
என்பதற்கு தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் ஆதாரமாக காணப்படுகின்றன.
புராதன அநுராதபுர காலத்தில் இடம்பெற்ற வெளிநாட்டு வர்த்தகத்தில் இலங்கையின்
பண்டைய துறைமுகங்கள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்துவதை
நோக்காக கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அநுராதபுர இராசாதானியில்
நிலவிய வெளிநாட்டு வர்த்தகத்தில் முக்கியத்துவம் பெற்ற துறைமுகங்கள் மற்றும்
பொருட்கள், அநுராதபுரத்தோடு வர்த்தகத்தினை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு
வணிகர்கள் கையாண்ட உத்திகள், வர்த்தக நடவடிக்கைகளில் அரசு எவ்வாறான
பங்களிப்பினை செலுத்தியது போன்ற பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு
இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு
முடிவுகளை ஒழுங்குபடுத்தி உருவாக்கப்படுகின்ற வரலாற்றியல் ஆய்வு முறை
பயன்படுத்தப்பட்டுள்ளது. அநுராதபுரகாலத்தில் வெளிநாட்டு வர்த்தகத் தொடர்புகள்
ஏற்பட்டமைக்கு அதன் அமைவிட முக்கியத்துவம், இலங்கையின் சந்தை முறைகள்.
பௌத்த சமயத்தின் பரவல், கப்பல் மையமிக்க நாடாக காணப்பட்டமை இலங்கையில்
கிடைத்த தரமான வர்த்தகப் பொருட்கள் என்பன பிரதான காரணிகளாக அமைந்தன.
இந்தியாவிற்கு அருகில் இலங்கை அமைந்திருந்தமை, பல பௌத்த துறவிகள்,
வணிகர்கள் இலங்கைக்கு வந்தமை இதற்குச் சிறந்த சான்றாகும். இலங்கையிலிருந்து
ஏராளமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதுடன், பல பொருட்கள் இறக்குமதியும்
செய்யப்பட்டமைக்கான சான்றுகள் மாந்தை, கோகரண, ஜம்புகோளப்பட்டணம், உருவெல.
கொடவாய போன்ற துறைமுகங்களிளும் அனுராதபுரம், அல்லைப்பிட்டி, யாப்பகுவ.
திஸ்மஹாராம், அபயகிரி முதலான பல தொல்லியற் தளங்களிளும்
கண்டறியப்பட்டுள்ளன. வணிகர்களின் வருகையால் அநுராதபுர காலத்தில் பல சமூக
மாற்றங்கள் சமய, திருமண மொழி ரீதியில் ஏற்பட்டதுடன் புதிய குடியிருப்புக்களும்
ஏற்படட்ன.