Abstract:
இலங்கையின் வரலாற்றுத் தொன்மை மிக்க பகுதியாக திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமப்பற்று காணப்படுகின்றது. அநுராதபுர இராசதானி காலம் தொட்டு வரலாற்றைச் சிறப்பினைக் கொண்ட இப்பிரதேசம் பிற்காலச் சோழர்களின் கீழான வன்னிமைகளின் ஆட்சியில் தம்பலகாமப்பற்று என வழங்கப்பட்டது. இங்கு காணப்படும் வரலாற்றுச் சின்னங்களை கண்டறிவதனூடாக. தம்பலகாமப்பற்றின் வரலாற்றுத் தொன்மையை வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். வரலாற்று அணுகுமுறையினூடாக இவ்வாய்வு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தம்பலகாமப்பற்றில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள், கல்வெட்டு சாசனங்கள், பழைய கட்டிடங்களின் இடிபாடுகள் மற்றும் எச்சங்கள். சூளவம்சம், ஸ்ரீ தக்ஷிண கைலாச புராணம், கோணேசர் கல்வெட்டு போன்ற மூலத்தரவுகளுடன் நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணையத்தள கட்டுரைகள் மூலமாக பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இவ்வாய்வின் முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாய்வின் மூலம் புராதன தொல்லிற் சின்னங்களான குளங்கள், கோயில்கள், கல்வெட்டுக்கள், விகாரைகள் போன்றன அநுராதபுரக் காலம் தொட்டு திருகோணமலை வன்னிமைகளின் காலத்திற்கு உட்பட்டதாகும். இவை அனுராதபுர, பொலன்னறுவ இராசதானிக் கால மன்னர்களாலும் சோழ மன்னர்களாலும் தம்பலகாமப்பற்று வன்னிமைகளாலும் அமைக்கப்பட்டுள்ளன. இவை வன்னிமைகளின் ஆட்சிக்கு முன்பிருந்த வரலாற்றுத் தொன்மையினை உறுதிப்படுத்துகின்றது. ஐரோப்பியரின் ஆட்சி இலங்கையில் ஏற்படுத்தப்பட்டு திருகோணமலை தம்பலகாமப்பற்றுப் பகுதியில் அவர்களின் ஆதிக்கம் ஏற்பட்ட காலத்திலிருந்து சுதந்திரம் பெற்ற காலம் வரையிலான, தொல்லியல் அம்சங்களாக காணப்படும் கோயில்கள். ஆங்கிலேயர் கால பாடசாலைகள், பள்ளிவாசல்கள். பிற இடங்கள் போன்றவற்றின் வரலாற்று உண்மைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை கண்டி இராசதானியுடனும், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர். பிரித்தானியர் ஆட்சியுடனும் தொடர்புபட்டதாகக் காணப்படுகின்றன. இதன்படி அநுராதபுர இராசதானிக் காலம் முதலாக ஐரோப்பியர் காலம் வரை வரலாற்றுத் தொன்மை மிக்க பிரதேசமாக தம்பலகாமப்பற்று காணப்பட்டது என்பது தெளிவாகின்றது.