Abstract:
இவ்வாய்வு வரலாற்றினை உய்துணர உதவும் அம்சங்களாக விளங்கும் இலக்கியங்கள் மற்றும் தொல்லியல் சான்றுகள் என்பனவற்றிற்கு இடையிலான உண்மைத் தன்மையினை வெளிப்படுத்தும் நோக்கினில், ஆய்வுத் தலைப்பினை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தீவானது தெரிவுசெய்யப்பட்டதோடு, பரந்த வரலாற்றினை உடையதாக இலங்கைத் தீவானது காணப்படுவதனால் பூர்வ வரலாற்றினையுடைய இலங்கையின் வரலாற்று கட்டமைப்பிலிருந்து இடைக்கால இலங்கை தெரிவுசெய்யப்பட்டு, இடைக்கால இலங்கை வரலாற்றினை அறிய உதவும் மூல நூலாக கருதப்படும் பாளி இலக்கியமான சூளவம்சத்தின் துணையுடன் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ள நம்பகரமாக சான்றுகளையும், அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல் பதிவுகளையும் ஆய்வுக் கருவிகளாகப் பயன்படுத்தி தரவுகள் பெறப்பட்டது. அத்தோடு இடைக்கால இலங்கை வரலாறு பற்றி எழுதப்பட்டுள்ள பிற நூல்கள் மற்றும் கட்டுரைத் தொகுப்புக்கள் வாயிலாகவும் தரவுகள் பெறப்பட்டுள்ளது.
இவ்வாய்வில் இலங்கையின் தொன்மை வரலாற்றில் முக்கிய இடத்தினைப் பெற்ற காலமாக கருதப்படும் இடைக்கால இலங்கை வரலாற்றினை கட்டமைக்கும் நோக்குடன். குறிப்பாக இடைக்கால இலங்கை வரலாற்றில் தமிழரின் வரலாற்றுக் கட்டமைப்பினில் மிக முக்கிய காலமாக விளங்குவதனை அவதானிக்க முடிந்தது. அத்தோடு பாளி இலக்கியங்களில் முழுமையான இடைக்கால இலங்கை வரலாறு அதன் உண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்டுள்ளது என கருதமுடியாது. ஏனெனில் பௌத்த மதத்துடன் தொடர்புடையே வரலாறே அதில் அதிகம் காணப்படுகின்றது என்ற உண்மையினையும் உணர வேண்டியுள்ளது. இலங்கை வரலாற்றில் பிற இனக் குழுக்கள் காணப்படுமிடத்தும் பௌத்தத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட்டு அது தொடர்பான பெரும்பாலான தகவல்களையே பாளி இலக்கியம் கூறுகின்றது. ஆனால் இதற்கு மாறாகவும் பாளி இலக்கியம் கூறும் வரலாற்றின் உண்மைத் தன்மையினை புலப்படுத்தும் வகையிலும் தொல்லியல் சான்றுகள் பல இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளமை நோக்கத்தக்கது.
வரலாற்றின் உண்மைத் தன்மையுடன் வரலாற்றினை கட்டமைப்பதற்கு தொல்லியஸ் சான்றுகளுடன் இலக்கியங்களிற்கும் முக்கிய பங்குண்டு. இருப்பினும் இலக்கியங்கள் கூறும் வரலாறானது அதனை எழுதுபவரின் காலத்திற்கும் நோக்கத்திற்கும் அமைவாகவும் திரிபடைந்து காணப்படுகின்றது. இதனால் தொல்லியல் சான்றுகளுடன் இலக்கியம் கூறும் வரலாற்றினையும் இணைத்து, அவற்றினை ஒப்பிட்டு உண்மைத் தன்மையுள்ள வரலாற்றினை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்திலேயே தற்கால சூழல் நகர்கின்றது. இதற்கமைய பாளி இலக்கியம் மற்றும் தமிழ்ச் சாசனம் கூறும் இடைக்கால இலங்கை வரலாறு பற்றிய தகவல்களை முன்வைப்பதுடன், பாளி இலக்கியம் கூறாது
விட்ட வரலாறுகளை குறிப்பாக தமிழர் தொடர்பான பல வரலாறுகளை தமிழ் சாசனங்கள்
உண்மைத் தன்மையுடன் கூறுகின்றன போன்ற விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.