Abstract:
இரண்டாம் புவனேகபாகுவின் முஸ்லிம் மனைவிக்குப் பிறந்த கலே பண்டார எனும் இளவரசன் சம்பந்தப்பட்ட இச்சம்பவம் உண்மையானது. இரண்டாம் புவனேகபாகு மன்னனின் மரணத்தின் பின்னர் மன்னனின் முஸ்லிம் மகன் முடி சூடப்பட்டான். முஸ்லிம் ஒருவர் மன்னராக இருப்பதை மத குருமார்களும், முக்கியஸ்தர்களும் விரும்பாததால் மலை உச்சியில் யாகம் செய்ய என அழைத்துச் செல்லப்பட்டு மன்னன் மலையில் இருந்து வீழ்த்தப்பட்டு கொல்லப்பட்டான். இந்த மன்னன் குறுகிய காலமே ஆட்சி செய்தான். மேலும் இம் மன்னனினால் அரசியல்,சமய, பொருளாதார, தற்கால சமய நம்பிக்கை போன்ற அம்சங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்கமாகும். இதற்கு வரலாற்று ஒப்பியல் ஆய்வு முறையும் பயன்படுத்தப்படுகின்றது. குருநாகல் வாவி இவனால் நிர்மாணிக்கப்பட்டது. முஸ்லிம் மன்னன் கொல்லப்பட்ட பின் சில அமானுஷ்ய விடயங்கள் நடந்ததாகவும், அவனைக் கொன்றதே அதற்குக் காரணம் என்றும் மக்கள் நம்பியுள்ளனர். முஸ்லிம்கள் கலே பண்டார அவ்லியா என்ற நம்பிக்கையில் இங்கு சென்று பிரார்த்தனைகளைச் செய்து வருகின்றனர். அதிகமான சிங்கள மக்கள் இவரை கலேபண்டார தெய்யோ என அழைத்து வழிபட்டு வருகின்றனர். வத்ஹிமி, கலேபண்டார என்று அழைக்கப்படும் குறைஷான் இஸ்மாயில் எனும் இந்த மன்னன் தொடர்பான வரலாறு இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்திற்கான ஆதாரங்களில் ஒன்றாகும்.