Abstract:
இந்தியாவில் தோன்றிய கண்ணகி வழிபாடானது கி.பி 2ஆம் நூற்றாண்டில் கஜபாகு மன்னன் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை முழுவதிலும் பரவத் தொடங்கியது. இதனடிப்படையில் ஈழத்தில் கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடானது சிறப்புப் பெற்று விளங்குகின்றது. அவற்றுள் மட்டக்களப்புப் பிரதேசத்தில் கண்ணகி வழிபாடானது பரவிய விதத்தினை அங்குள்ள கண்ணகி அம்மன் ஆலயங்களின் வரலாற்றுப் பார்வையினூடாக அறியலாம். எனவே எனது ஆய்வானது "துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வரலாறும் அதன் நிருவாகக் கட்டமைப்பில் குடிவழிகளின் வகிபாகமும் ஓர் வரலாற்று ஆய்வு" என்ற தலைப்பினூடாக தொன்மையான, தனித்துவமான வரலாற்றையும் ஆலய நிருவாகத்தில் குடிவழிகளின் செல்வாக்கையும் வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
அதாவது துறைநீலாவணைப் பிரதேசத்தின் பொருளாதார, சமூக, வழிபாட்டு பாரம்பரியங்கள், துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய தோற்றம், வரலாறு, அவ்வாலய தோற்றம் பற்றிய வாய்மொழிக்கதைகளினூடாக வெளிப்படுத்தப்பட்ட வரலாற்றுண்மைகள், ஆலய அமைவிடம், அமைப்பு முறை. சடங்கு முறைகள், ஆலய பாரம்பரியமும் சீர்மையும், ஆலயம் தொடர்பாக எழுந்த பிரபந்தங்கள், மட்டக்களப்பில் பூர்வீக குடிகள், குடியேற்றங்கள், கண்ணகி அம்மன் ஆலய நிருவாகக் கட்டமைப்பில் குடிவழிகளின் வகிபாகம் போன்ற பல விடயங்கள் இவ்வாய்வில் கள ஆய்வு, நேர்காணல், கலந்துரையாடல், வரலாற்று ஆய்வு முறையியலுக்கு ஊடாக தெளிவாக வெளிக்கொணரப்பட்டுள்ளது.
துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் சீர்பாதர் பெற்றிருந்த இடம் இவ்வாலய நிருவாக ஒழுங்கமைப்பின் முக்கியமானதொரு கட்டமாக அமைகின்றது. துறைநீலாவணைப் பிரதேசத்தில் உள்ள சீர்பாத குலத்தை சேர்ந்த குடிகளை ஒன்றிணைத்து இந்த ஆலயத்தின் நிருவாகக் கட்டமைப்பும், பூசை வழிபாட்டுக் கடமைகளும் வகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நடைமுறையே இன்று வரைக்கும் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மட்டக்களப்பிலே கண்ணகி ஆலயங்கள் பற்றி பல்வேறு பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள் இடம்பெற்றாலும் துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வரலாற்றின் பெருமையையும் தனித்துவத்தையும், அதன் நிருவாகக் கட்டமைப்பில் குடிவழிகளின் வகிபாகத்தையும் வெளிப்படுத்தும் வகையிலான தனி ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் இவ்வாலயம் பற்றி இனி வரும் காலங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளுவோருக்கும் இப்பிரதேச குடிவழி முறைகளை
பற்றி தேடுவோருக்கும் இவ்வாய்வு மிக்க பயனுள்ளதாக அமையும்.