Abstract:
"நெடுங்கேணி ஐயனார் கோயிலும் பிராமிக் கல்வெட்டும் ஒரு வரலாற்று ஆய்வு" எனும் தலைப்பில் அமைந்த இவ்வாய்வானது வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பிரதேச செயலகத்தினுள் அமையப்பெற்றிருக்கும் நொச்சியடி ஐயனார் ஆலயத்தினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்னாசியாவில் இலங்கையானது நீண்ட தொடர்ச்சியான வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்டது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள நெடுங்கேணிப் பிரதேசத்தின் தொன்மையை நிரூபிக்கும் வகையில் இக்கோயில் கல்வெட்டு காணப்படுகின்றது. எனினும் இங்கு விரிவான ஆய்வுகள் நடைபெற்றிருக்காமை குறிப்பிடத்தக்கது. ஐயனார் கோயிலில் காணப்படும் பிராமிக் கல்வெட்டானது கி.மு 3ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 5ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது என நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் சிறப்பெழுத்துக்களான ள், ன் போன்றவை காணப்படுவது தமிழரின் வரலாற்றை மீளாய்வு செய்வதாக அமைகின்றது. இக்கல்வெட்டின் அருகில் காணப்படும் கேணியே நெடுங்கேணி எனும் இடப்பெயருக்கு காரணமாக அமைவதுடன். அங்கு காணப்படும் ஏனைய தொல்லியற் சான்றுகள் பெருங்கற்கால மக்கள் வாழ்ந்ததை உறுதி செய்கின்றது. இக்கல்வெட்டும், தொல்லியற் சான்றுகளும் சமகாலத்தில் இருந்தே ஐயனார் வழிபாடு இவ்விடத்தில் இடம்பெற்றிருந்ததனை உறுதிப்படுத்துகின்றது. இவ்வாலயத்திற்கென்று தனித்துவமான வரலாறு காணப்படுவதுடன், இங்கு சடங்குகளை மேற்கொள்ள பரம்பரை பரம்பரையாக இவ்வாலயத்திற்கென்றே குறிப்பிட்ட ஒரு வம்சாவளியில் வந்த குடும்பத்தினர் இன்று வரை காணப்படுகின்றனர். இவ்வாலயத்திற்கென்று ஏனைய ஆலயங்களிடமிருந்து தனித்துவமாக எடுத்துக்காட்டும் பாரம்பரிய வழிபாட்டுச்சடங்குகள் அடையாளமாக விளங்குகின்றன. அந்நேரம் இவ்வாலயமானது பாரம்பரியமான ஆகமம் சாராத வழிபாட்டு முறைகளை மாற்றமடையாமல் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.