Abstract:
பண்டைய காலம் தொடக்கம் இலங்கையின் பல்வேறுபட்ட கிராமங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான வரலாற்றையும், பண்பாட்டையும் கொண்டனவாக விளங்குகின்றன. அவற்றை ஐதீகக் கதைகள், தொல்லியல் ஆதாரங்கள், இலக்கியங்கள், வாய்மொழிக் கதைகள் போன்றவை சான்று பகர்கின்றன. அந்தவகையில் அனுராதபுரம் மாவட்டத்தில் தொன்மையான கிராமங்களில் ஒன்றாக நாச்சியாதீவுக் கிராமம் காணப்படுகின்றது. குளத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய இக்கிராமத்தின் வரலாற்றுத் தொன்மை, தொல்பொருட் சின்னங்கள் மற்றும் அதன் வாழ்வியல் அம்சங்களை ஆய்வு செய்வதாக இவ்வாய்வு அமைகின்றது. வரலாற்றுத் தொன்மையைக் கண்டறிய வரலாற்று அணுகு முறையிலும், ஒப்பீட்டு அணுகுமுறையிலும் இவ்வாய்வு அமைந்துள்ளது. இவ்வாய்வில் முதலாம் நிலைத் தரவுகளாக மூல நூல், கள ஆய்வு, நேர்காணல் மூலம் பெறப்பட்ட தரவுகளும், பழைய புகைப்படங்கள், தொல்லியல் திணைக்கள அறிக்கை, நாச்சியாதீவுப் பிரதேச செயலகத்தின் வருடாந்த அறிக்கை போன்றனவும், இரண்டாம் நிலைத் தரவுகளாக கிராம வரலாறு தொடர்பாக வெளியிடபட்ட பத்திரிகைகள், கட்டுரைகள், சஞ்சிகைகள், இணையத்தள தகவல்கள் என்பனவும் அமைந்துள்ளன. நாச்சியாதீவுக் கிராமத்தின் தொன்மையான வரலாறு வாய்மொழியாகப் பேணப்பட்டு வருகின்ற நிலையில் இக்கிராம வரலாற்றை ஆவணப்படுத்துவதாகவும், அதன் வரலாற்றுச் சின்னங்கள் சில மறைந்து போவதுடன் அதன் வாழ்வியல் அம்சங்கள் குறித்த விடயங்களும் வெளிக்கொணரப்பட்டுள்ளதனை இவ்வாய்வின் மூலம் அறிய முடியும், நாச்சியாதீவுக் கிராமத்தின் முக்கியத்துவத்தை அறிந்து எதிர்காலத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளவும் இவ்வாய்வு துணை புரியும் எனலாம்.