dc.description.abstract |
வணிகத்தின் செயற்பாட்டிற்கும் அதன் முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைகின்ற விளம்பரங்கள் சமகால சூழலில் மனிதர்களை பண்டங்களாக மாற்றுகின்ற நிலையானது காணப்படுகின்றது. இலத்திரனியல் ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் இடம்பெறுகின்ற விளம்பரங்கள் நாம் எப்படி நுகர வேண்டும்? எதனை நுகர வேண்டும்?, எப்போது நுகர வேண்டும்? ஆகிய விடயங்கள் தொடர்பாக நுகர்வோருக்குரிய வழிகாட்டியாக அமைகின்றன. ஒவ்வொரு தனி நபரையும் கவரக்கூடிய வகையில் மூல உபாயங்களின் உதவியுடன் இத்தகைய நிறுவனங்கள் செயற்படுவதோடு இவற்றினுடைய மூல உபாயங்களின் மொத்த உருவமாக விளம்பரங்கள் காணப்படுகின்றன. போர்டிரியரின் கருத்தின்படி நுகர்வு என்பது பின்நவீன சமூகத்தில் புதிய பரிமாணங்களை பெற்றுள்ளது. நவீன சமூகத்தில் காணப்பட்டது போல பொருட்களை தேவைகளுக்காக நுகர்வு செய்யாமல் அரைவாசி குறியீடுகளையும், விம்பங்களையும் நுகரும் ஒரு செயற்பாடாக காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் சமூகத்தின் பிரதான அங்கமாக திகழ்கின்ற பெண்களை விளம்பரங்கள் இலக்கு வைப்பதன் மூலம் வணிக நிறுவனங்களின் நோக்கத்தினை இலகுவாக அடைந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் செயற்படுகின்றன.
விளம்பரங்களின் மூலம் போலியான விம்பங்கள் உருவாக்கப்பட்டு அவர்களை குழப்புவதன் மூலமும் உண்மையை மறைப்பதன் மூலமும் அவர்களின் சுதந்திரமான நுகர்வு அங்கு கேள்விக்குறியாகின்றது. இது அவர்களுடைய உணர்வுகளிலும் ஆசைகளிலும் முரண்பாட்டினைத் தோற்றுவிப்பதோடு அதற்கான தீர்வினை அவர்களிடமே கொடுப்பதாகவும் அமைகின்றது. எனவே இத்தகைய விளம்பரங்களினால் சமகாலத்தில் பெண்கள் பல்வேறுபட்ட சவால்களை எதிர் நோக்குகின்றார்கள் அத்தகைய சவால்களை கண்டறிவதும், விளம்பரங்களினுடைய தெளிவை உணர்த்துவதும், இனங்காணப்பட்ட பிரச்சனைக்குத் தீர்வு காணும் அடிப்படையில் இந்த ஆய்வானது முன்னெடுக்கப்படுகின்றது. மேலும் விளம்பரங்கள் தொடர்பாகவும் அவை ஏற்படுத்தும் பிரச்சனைகள் தொடர்பாகவும் வெளிவந்துள்ள கட்டுரைகள், சஞ்சிகைகள், மாநாட்டு அறிக்கைகள் என்பவற்றின் மூலமாக தரவுகளும் தகவல்களும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக ஆராய்வதற்கு ஐந்து அத்தியாயங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அத்தியாயத்திலும் தலைப்புடன் தொடர்புபட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது. இதன்படி முதலாம் அத்தியாயம் ஆய்வு முன்மொழிவாகவும், இரண்டாம் அத்தியாயம் மெய்யியல் பற்றிய விளக்கங்கள், மூன்றாம் அத்தியாயம் விளம்பரங்கள் பற்றிய தெளிவுகளும், நான்காம் அத்தியாயம் பெண்கள் பற்றிய சித்தரிப்பும், அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் பற்றியதாகவும், ஐந்தாம் அத்தியாயம் கருதுகோள்
பரிசீலனை, முடிவுரை. பரிந்துரை என உள்ளடக்கப்பட்டு இந்த ஆய்வானது
மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் எதிர் நோக்குகின்ற சவால்களை பின்நவீனத்துவ நோக்கிலும் விமர்சன கோட்பாட்டின் அடிப்படையிலும் மற்றும் பெண்ணிய மெய்யியல் ரீதியாகவும் ஆராயப்பட்டுள்ளது. ஒரு வணிக நிறுவனத்தை பொறுத்தவரையில் விளம்பரமானது முக்கியத்துவமுடையது இது பொருட்களையும் சேவைகளையும் நுகர்வோருக்கு விற்பனை செய்வதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. ஒரு கம்பனியின் விளம்பரம் குறிப்பிட்ட ஒழுக்க விதிகளை பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் நடைமுறையில் விளம்பரங்களினால் பல்வேறுபட்ட பிரச்சனைகளும் ஏற்படுவதை நாம் காண முடியும்.
இந்த விளம்பரங்கள் இரண்டு பண்புகளைக் கொண்டதாக அமைகின்றது அந்தவகையில். முதலாவதாக ஒரு பொருள் பற்றிய தகவல்களை நுகர்வோருக்கு வழங்குகின்றது. மற்றையது ஒரு பொருளை வாங்குகின்ற நுகர்வோரைக் குறிப்பிட்ட பொருளை வாங்க தூண்டுகின்றது. எனவே ஒரு கம்பனியானது விளம்பர செயல்முறையில் ஈடுபடும் போது தனக்கான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றது. இதன்படி பெண்களையும் சிறுவர்களையும் அங்கீகரிக்கப்பட்ட முறைக்கு அப்பாற்பட்ட வகையில் விளம்பரங்களில் பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு கடப்பாடு காணப்படுகின்றது. அத்தோடு ஒரு நிறுவனம் தனது பொருட்கள் சேவைகள் தொடர்பாக தெளிவான முறையில் நுகர்வோருக்கு எடுத்துரைக்க வேண்டும். என பலதரப்பட்ட விதிமுறைகளை உள்ளடக்கிய இந்த விளம்பரம் சமகாலத்தில் அதிகரித்த நுகர்வு தேவையின் காரணமாகவும் அதிகரித்த வணிக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் வருகையின் காரணமாகவும் சமூகத்தின் அங்கமாக திகழ்கின்ற பெண்கள் பல்வேறுவிதமாக சித்தரிக்கப்படுவதோடு அதனால் அவர்கள் சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர் நோக்குகின்றார்கள். என்பதை இனம் கண்டு தெளிவுபடுத்துவதோடு அவற்றுக்கான தெளிவையும் கொடுப்பதாகவும் அவற்றிலிருந்து எவ்வாறு பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை விளக்குவதாகவும் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்படுள்ளது. |
en_US |