Abstract:
மெய்யியலின் முதன்மைக்குரிய பகுதிகளில் ஒன்றாக முறையியல் விளங்குகின்றது. இது "மெதடோலஜி' என்கின்ற ஆங்கிலச் சொல்லிலிருந்து தோற்றம் பெற்றதாகும். இங்கே விஞ்ஞான ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படுகின்ற முறைகளின் தோற்றம், அவற்றின் இயல்பு, அவற்றுக்கு எதிரான விமர்சனங்கள் போன்றவாறான விடயங்கள் இந்த முறையியல் பகுதிக்குள் ஆராயப்படுகின்றது.
ஒரு விஞ்ஞானி தாம் உருவாக்குகின்ற கொள்கைகளை சிறந்த முறையில் முன்வைப்பதற்கு அடித்தளமாக அமைவது முறைகளாகும். இந்த அடிப்படையில் ஆரம்பகாலத்தில் இருந்து தற்காலம் வரை பல்வேறுபட்ட ஆய்வு முறைகள் தோற்றம் பெற்று வந்துள்ளன. அவற்றுள் ஆரம்பத்தில் அரிஸ்ரோட்டிலினால் உய்த்தறிமுறையும் பின்பு இதன் குறைபாடுகளை களைந்து பிரான்சிஸ் பேக்கனினால் தொகுத்தறி முறையும் உருவாக்கப்பட்டது. இதற்கு பின்பும் தோமஸ் கூனின் சார்புவாத முறை, பொப்பரின் பொய்ப்பித்தல் முறை என்றவாறு முறையியலின் தோற்றம் வளர்ச்சியை பெற்றுக் கொண்டே செல்கின்றது.
இங்கு ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட தொகுத்தறி எனும் அனுமானம் பேக்கனினால் உருவாக்கப்படுகின்றது. இந்த தொகுத்தறி அனுமானம் என்பது அவதானிக்கப்பட்ட ஒரு சில நிகழ்வுகளில் இருந்து பொதுவான ஒரு முடிவினை பெற்றுக் கொடுக்கின்ற ஒரு முறையாகும். இது தன்னகத்தே பலங்களையும், வலிதுத்தன்மையினையும் கொண்டு இருந்தாலும் இக்காலத்து மெய்யியலாளர்களால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முறையியலின் பல்வேறுபட்ட வளர்ச்சி முறைகளில் ஒன்றாக தொகுத்தறிவு முறை மேலைத்தேயத்தில் தோற்றம் பெற்று வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கின்றது. அந்த வகையில் புதிய அறிவினை உருவாக்கி விஞ்ஞான வளர்ச்சியினை மேற்கொள்வதற்கு தொகுத்தறி முறையானது மிகவும் முக்கியமான ஒரு முறையாகவும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு முறையாகவும் காணப்படுகிறது என்பதை இவ்வாய்வு நிறுவிக்காட்டுகின்றது