Abstract:
இன்றைய மனித சமூகம் எதிர்நோக்கும் பிரதான பிரச்சனைகளுல் ஒன்றாக தாதியர்களின் ஒழுக்க மீறுகைகள் காணப்படுகின்றன. இது தன் வாழ்நாளில் ஒருமுறையாவது நோயாளியாக மாறும் நோயாளர்கள் எதிர்கொள்ளும் பிரதான சவாலாகின்றது. ஆரம்ப காலம் தொட்டு தற்காலம் வரையிலும் தாதிய தொழில் என்பது புனிதமானதாக காணப்பட நவீன காலத்தில் தாதியம் ஒழுக்க நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக காணப்படுகின்றது.
இங்கு நோயாளர்களின் கவனப் பராமரிப்பில் தாதியர்கள் தங்களது ஒழுக்க நெறிமுறைகளில் இருந்து விலகும் போது நோயாளர்களுக்கு பாதகமானதொரு சூழலை ஏற்படுத்துகின்றது. இதனடிப்படையில் "நோயாளர் கவன பராமரிப்பில் தாதியர்களின் வகிபாகமும் அங்கு இடம் பெறும் ஒழுக்க ரீதியான சவால்களும்" எனும் தலைப்பினை கொண்டதாக இவ்வாய்வு அமையப்பெற்றுள்ளது.
அத்துடன் இவ்வாய்வானது நூல்கள் பத்திரிகைகள் சஞ்சிகைகள் இணையதள வளங்கள் என்பவற்றை பயன்படுத்தி அவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக அமைகின்றது.
நோயாளர் மீதான ஒழுக்கமீறுகை என்பது தாதியர்களால் பல வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றது. அதை உடல் உள ரீதியான பாதிப்புகளாகவும் அமையலாம்.
எனவே ஒழுக்கவியல் தளத்தின் அடிப்படையில் பிரயோக ஒழுக்கவியல் ரீதியாக இன்று மருத்துவ ஒழுக்கவியலின் அடிப்படையில் ஆய்வாளனால் இங்கு ஆய்வு செய்யப்படுகின்றது. இத்தகைய பிரச்சினைகள் தாதியர்கள் தாதிய ஒழுக்க நெறி கோவையில் இருந்து விலகி தாதியக் கோட்பாட்டு செயல்முறைகளை மேற்கொள்வதனால் இடம்பெற நோயாளர்களின் உரிமைகள் என்பதும் மீறப்படுவதாக உள்ளன.
எனவே இத்தகைய ஒழுக்கவியல் பிரச்சனைகளை கண்டறிந்து அவை எவ்வாறான வழிமுறைகளில் ஏற்படுகின்றன? என்பதனை சுட்டிக்காட்டி அவற்றுக்கான தீர்வுகளையும் பரிந்துரைகளையும் எடுத்து கூறுவதாக ஆய்வாளனால் இது உருவாக்கப்படுகின்றது.
இதற்காக ஐந்து அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு இவ் ஆய்வு பயணிக்கின்றது.