dc.description.abstract |
இந்த ஆய்வானது இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட பேரினப் பொருளாதார மாறிகளில், கச்சா எண்ணெய் விலை மாற்றங்களின் தாக்கம்" தொடர்பாக ஆராய்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாட்டின் அபிவிருத்தியிலும் கச்சா எண்ணெயின் பயன்பாடு என்பது இன்றியமையாததாக காணப்படுகின்றது. இதன்படி இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட பேரினப் பொருளாதார குறிகாட்டிகளான மொத்த உள்நாட்டு உற்பத்தி, நுகர்வோன் விலை சுட்டெண் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகியவற்றில் கச்சா எண்ணெயின் விலை மாற்றங்கள் செலுத்தும் நீண்டகால மற்றும் குறுங்காலத் தாக்கம், அவற்றுக்கு இடையிலான காரண காரியத் தொடர்புகள் ஆகியவற்றை விளக்குவதாக இவ்வாய்வு அமைந்துள்ளது. ஆய்விற்காக 1990 2021 வரையிலான வருடாந்த காலத்தொடர் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வு மூன்று மாதிரிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனில் முதலாவது மாதிரியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சார்ந்த மாறியாகவும் இரண்டாவது மாதிரியில் நுகர்வோன் விலை சுட்டெண் சார்ந்த மாறியாகவும் மூன்றாவது மாதிரியில் வெளிநாட்டு நேரடி முதலீடு சார்ந்த மாறியாகவும் மூன்று மாதிரிகளிலுமே சாரா மாறியாக கச்சா எண்ணெய் விலையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு Engle Granger பகுப்பாய்வு முறைமையின் கீழ் அலகு மூலச் சோதனை, நீண்ட கால மற்றும் குறுங்கால தொடர்புகளுக்கான சோதனைகள் மற்றும் மாறிகளுக்கிடையிலான காரண காரிய சோதனையும் மாதிரியுருவின் உறுதிப்படுத்தல் மற்றும் ஸ்திரத்தன்மைக்கான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆய்வு முடிவின்படி, கச்சா எண்ணெய் விலை மாற்றமானது மொத்த உள்நாட்டு உற்பத்தி, நுகர்வோன் விலை சுட்டெண் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகிய பேரினப் பொருளாதார மாறிகளில் நீண்ட காலத்தில் நேர்க்கணியத் தாக்கத்தினையும் குறுங்காலத்திவ் நுகர்வோன் விலை சுட்டெண்ணில் மட்டும் எதிர்க்கணியத் தாக்கத்தினையும் ஏனைய மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் நேர்க்கணியத் தாக்கத்தினையும் செலுத்துகிறது. அதுமட்டுமன்றி நுகர்வோன் விலை சுட்டெண் மாத்திரம் காரண காரிய தொடர்பினை கொண்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் பிரதிபலிக்கின்றன |
en_US |