Abstract:
வாழைச்சேனைப் பிரதேசத்தில் மக்களின் நிதி தொடர்பான தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரச வங்கிகளாக இலங்கை வங்கி, மக்கள் வங்கி என்பன காணப்படும் அதேவேளை தனியார் வங்கிகளும் தமது வங்கிச்சேவையினை வாழைச்சேனை பிரதேச மக்கள் மத்தியில் விரிவுபடுத்தியுள்ளது. இந் நிலையானது மக்கள் மத்தியில் அரச வங்கிகள் சார்பில் காணப்படும் சாதகமான நிலையில் சரிவடைந்து செல்வதனை எடுத்துக்காட்டுகின்றமை அவதானிக்க வேண்டிய விடயமாகும். எனவே வாழைச்சேனைப் பிரதேசசெயலகப் பிரிவில் அரச வங்கிகளுக்கிடையிலான சேவைத் தரத்தின் மீதான வாடிக்கையாளர் திருப்தி பற்றிய ஒப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
ஆய்வின் நோக்கமாக வாழைச்சேனைப் பிரதேசசெயலகப் பிரிவில் அரச வங்கிகளுக்கிடையிலான வங்கிச் சேவைகளின் தரம் எவ்வாறுள்ளது என்பதனைக் கண்டறிதல். அரச வங்கிகளுக்கிடையிலான வாடிக்கையாளர்களின் திருப்தி எவ்வாறுள்ளது என்பதனைக் கண்டறிதல், அரச வங்கிகளுக்கிடையிலான வங்கிச் சேவைகளின் தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தியினை ஒப்பிடுதல் என்பன காணப்படுகின்றன. மேலும் இவ்வாய்வில் வாடிக்கையாளர்கள் சார்பில் ஒவ்வொரு வங்கிகளையும் பிரதிபலிக்கும் 100 பேர் மாதிரிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டு, மொத்தமாக 200 வாடிக்கையாளர்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.
அந்தவகையில் முடிவுகளினை ஆராய்கையில் சேவைத் தரம் இலங்கை வங்கி
சார்பில் 2.92 ஆகவும் மக்கள் வங்கி சார்பில் 2.88 ஆகவும் காணப்படுவதுடன், இவ்
இரு வங்கிகள் சார்பிலும் மக்கள் மத்தியில் சேவைத்தரமானது நடுத்தர
நிலையிலையில் உள்ளதனை எடுத்துக்காட்டுகின்றது. மேலும் வாடிக்கையாளர்
திருப்தி இலங்கை வங்கி சார்பில் 3.03 ஆகவும் மக்கள் வங்கி சார்பில் 2.90 ஆகவும்
காணப்படுவதுடன், அவை தொடர்பிலும் சேவைத்தரம் நடுத்தர நிலையில் உள்ளமை
குறிப்பிடத்தக்கது.இடைப்பெறுமானங்களின் அடிப்படையில் வாழைச்சேனைப்
பிரதேசசெயலகப் பிரிவில் உள்ள மக்கள் வங்கியினை விடவும் இலங்கை வங்கியின்
சேவைத்தரம் அதிகமாகக் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் முடிவுகளின்
அடிப்படையில் இரு வங்கிகளும் தமது சேவைத் தரம் மற்றும் வாடிக்கையாளர்
திருப்தி தொடர்பில் அக்கறைகொள்ள வேண்டியது அவசியமாகும்.