Abstract:
பாடசாலைகளில் காணப்படும் வரையறையற்ற கல்வி வெளியீடானது மாணவர்களின் க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சித்தி, சித்தியின்மை என்றவாறு தீர்மானிக்கப்படுகின்றது. பெருந்தொகையான மாணவர்கள் கல்வி கற்கும் பட்டிருப்பு வலயத்தில் சராசரி தேசிய கல்விச் செயற்றிறன் மட்டத்துடன் ஒப்பிடும் போது பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள விஞ்ஞானப்பிரிவு மாணவர்களின் கல்விச் செயற்றிறன் மட்டமானது குறைவாகவே உள்ளது. ஆகவே இங்கு இதற்கான காரணிகளை அடையாளம் காணவேண்டிய தேவை உள்ளது. இவ்வாய்வின் நோக்கமானது மாணவர்களின் கல்விச் செயற்றிறன் மட்டத்தை பாதிக்கும் காரணிகளை இனங்காணல் மற்றும் அக்காரணிகளின் அடிப்படையில் ஏற்படும் விளைவை அடையாளம் காணல் என்பனவாகும். இதனை ஆய்வு செய்வதற்காக பட்டிருப்புக் கல்வி வலயத்தில் 80 விஞ்ஞானப்பிரிவு மாணவர்களிடமிருந்தும், 24 விஞ்ஞானப்பிரிவு ஆசிரியர்களிடமிருந்தும் வினாக்கொத்து முறையில் எழுமாற்றான தரவு எடுப்பு மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டது. இத்தரவுகள் விவரணப் புள்ளிவிபரவியல் மூலம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இவ் புள்ளிவிபரவியல் ஆய்வுகளின் முடிவிலிருந்து மாணவர் அக்கறையும் ஈடுபாடும், கற்பித்தல் தரம், மதிப்பீடு போன்றவை கல்விச் செயற்றிறன் மட்டத்துடன் நேர்க்கணியத் தொடர்பையும் கற்பித்தல் சூழலும் குடும்ப வருமானமும் எதிர்க்கணியத் தொடர்பையும் கொண்டுள்ளது.
அத்துடன் முடிவுகளானது சுயகற்றல் நேரம் போதாமை, மாணவர்களின் கற்றல் ஆர்வம் குறைவாக உள்ளமை, குறைவான விளங்கிக் கொள்ளும் ஆற்றல், கற்றலில் இலகு என்பவற்றில் பிரச்சினை காணப்படல், குறைந்தளவான உபகரணப் பயன்பாடும் நுட்பமும், குறைந்தளவான மேலதிக வகுப்புக்கள், செய்முறைகளை செய்து காட்டுவது போதாமை, குறைந்தளவான ஆய்வுகூட வசதி, குறைந்தளவான பின்னூட்டல், திருப்தியற்ற மதிப்பீட்டு முறை போன்றவை விஞ்ஞானப்பிரிவு மாணவர்களின் கல்விச் செயற்றிறன் மட்டத்தைப் பாதிக்கின்றது. முன்வைக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆசிரியர்களின் கற்பித்தல் தரமானது, கல்விச் செயற்றிறன் மட்டத்தை தீர்மானிக்கும் முதன்மைக் காரணியாக அமைவதுடன் மதிப்பீடு இரண்டாவது முக்கிய காரணியாகவும் மாணவர்களின் அக்கறையும் ஈடுபாடும் மூன்றாவது காரணியாகக் காணப்படுகின்றது. இம்மூன்று காரணிகளும் மாணவர்களின் கல்விச் செயற்றிறன் மட்டத்தில் செல்வாக்குச் செலுத்தும் சிக்கலான காரணியாக அமைகின்றது. இறுதியாக ஆய்வாளரினால் கல்விச் செயற்றிறன் மட்டத்தை அதிகரிப்பதற்கான தந்திரோபாயம் மற்றும் உத்திகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வில் முன்வைக்கப்பட்ட முடிவுகளானது கல்வி நிர்வாகிகளுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும், விஞ்ஞானப்பிரிவு மாணவர்களின் கல்விச் செயற்றிறன் மட்டத்தை உயர்த்துவதற்கு உதவியாக அமையும்