Abstract:
இன்றைய காலத்தில் தொழில் மனப்பாங்கில் காணப்படும் பிரச்சினைகளினால் மனிதன் அவனது இலக்கினை அடைய முடியாதுள்ளது. அதனடிப்படையில் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் தொழில் மனப்பாங்குகள் எத்தகைய நிலையில் காணப்படுகின்றது என்பது தொடர்பில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் தொழில் மனப்பாங்கு எத்தகைய நிலையில் காணப்படுகின்றது என்பதனைக் கண்டறிதல் மற்றும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் தொழில் மனப்பாங்குகளுக்கு (நிறுவனம்சார் ஆதரவுகள், தொழில் திருப்தி, உணர்ச்சிகரமான அர்ப்பணிப்பு. நெறிசார் அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு) மத்தியில் எத்தகைய தொடர்புகள் நிலவுகின்றன என்பதைக் கண்டறிதல் போன்ற இரு நோக்கங்கள் ஊடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆய்விற்காக மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள அரச வங்கிகளான மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி என்பனவும், தனியார் வங்கிகளான சம்பத் வங்கி, செலான் வங்கி, கொமர்சியல் வங்கி மற்றும் ஹட்டன் நெசனல் வங்கி என்பன தெரிவுசெய்யப்பட்டு, அரச வங்கி ஊழியர்களில் 120 ஊழியர்களும், தனியார் வங்கி ஊழியர்களில் 120 ஊழியர்களும் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவற்றின் அடிப்படையில் ஆய்வின் முடிவினை அவதானிப்போமாயின், இங்கு அரச துறை சார்பாக நிறுவனம்சார் ஆதரவுகள் 3.07, தொழில் திருப்தி 2.92. உணர்ச்சிகரமான அர்ப்பணிப்பு 2.81. நெறிசார் அர்ப்பணிப்பு 3.05. தொடர்ச்சியான அர்ப்பணிப்பு 2.98. ஆகவும் தனியார் துறை சார்பாக நிறுவனம்சார் ஆதரவுகள் 3.18, தொழில் திருப்தி 2.93, உணர்ச்சிகரமான அர்ப்பணிப்பு 2.85, நெறிசார் அர்ப்பணிப்பு 2.96, தொடர்ச்சியான அர்ப்பணிப்பு 3.09 ஆகவும் காணப்படுகின்றமையானது அனைத்து மாறிகளின் சார்பாக அரச மற்றும் தனியார் ஊழியர்களின் தொழில் மனப்பாங்கு நடுநிலையாக காணப்படுதலை எடுத்துக்காட்டுகின்றது. இறுதியாக அரச துறை சார்பாக தொழில் மனப்பாங்கு இடையாக 2.97 ஆகவும் தனியார் துறை சார்பாக தொழில் மனப்பாங்கு இடையாக 3.00 ஆகவும் காணப்படுவதனால், மட்டக்களப்பு பிரதேசத்தில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் தொழில் மனப்பாங்கானது நடுநிலையாக காணப்படுகின்றதுடன், இடைப்பெறுமானத்தின் அடிப்படையில் ஒப்பீட்டளவில் அரச துறையினை விடவும் தனியார் துறை தொழில் மனப்பாங்கானது அதிகமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஊழியர்களின் தொழில் மனப்பாங்குகள் மற்றும் தீர்மானிக்கும் மாறிகளிற்கு இடையில் நேர்த் தொடர்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது