Abstract:
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுக் கோட்டப் பாடசாலைகளில் சிரேஷ்ட இடைநிலை மாணவர்களுக்கு பாட வாண்மைத்துவ ஆசிரியர்கள் கற்பிக்கின்றார்கள். இவ்வாசிரியர்களின் கற்பித்தலால் மாணவர்களின் பாட அடைவுமட்டம் குறைந்து காணப்படுகின்றது. இதனால் ஆசிரியர்களின் பாட நிபுணத்துவம் சிரேஷ்ட இடைநிலை மாணவர்களின் பாட அடைவில் தாக்கம் செலுத்துகிறது. இதைக் கண்டறியும் நோக்குடன் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுப் பிரச்சினைக்கான தரவுகளைச் சேகரிப்பதற்காக பட்டிருப்புக் கல்வி வலயத்தில் உள்ள போரதீவுக் கோட்டப் பாடசாலைகளில் இருந்து நோக்கமாதிரி அடிப்படையில் மாதிரி தெரிவு செய்யப்பட்டன. இந்த ஐந்து பாடசாலைகளிலும் சிரேஷ்ட இடைநிலையில் கல்விகற்கும் க.பொ.த.சாதாரணதர மாணவர்கள் இலகு எழுமாற்று மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டன. க.பொ.த சாதாரண தரத்தில் 306 பிள்ளைகள் காணப்படுகின்ற போதிலும் ஆய்வாளன் தனது ஆய்வின் வசதியினைக் கருத்தில் கொண்டு 100 மாணவர்கள் இலகு எழுமாற்று மாதிரியின் மூலம் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இப் பாடசாலைகளில் க.பொ.த.சாதாரண தரத்திற்குக் கற்பிக்கின்ற 25 ஆசிரியர்கள் இலகு எழுமாற்று மாதிரி முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதிபர்கள் ஐந்து பேரும் ஆசிரிய ஆலோசகர்கள் நான்கு பேரும் நோக்கம் மாதிரி அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டன. ஆய்வுக்காக அவதானம், வினாக்கொத்து, நேர்காணல், ஆவணங்கள் என்பவற்றை உள்ளடக்கிய ஆய்வுக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதுடன் ஆய்வு நோக்கத்திற்கு ஏற்ப ஆய்வுவினாக்கள் தயாரிக்கப்பட்டு அளவுசார், பண்புசார், தரவுகள், Ms exel முறைமையின் ஊடாக பகுப்பாய்வு, வியாக்கியானம், கலந்துரையாடல், போன்ற செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆய்வில் பெறப்பட்ட முடிவுகளாக பாடசாலைகளில் காணப்படுகின்ற வளங்கள் பற்றாக்குறை காரணமாகப் பாட வாண்மைத்துவ ஆசிரியர்கள் கற்பிப்பதனால் மையப் பாடங்களில் மாணவர்களிடத்தில் போதிய தெளிவின்மை, செய்முறைப்பயன்பாடின்மை, பயிற்சியின்மை,மேற்பார்வை போதாமை, ஆசிரியர் அபிவிருத்தி வேலைத்திட்டம் அமுலில் இருந்தும் செயற்பாடுகளின்மை, ஆசிரியரின் திருப்தியற்ற கற்பித்தல் முறைமை, கற்றல் சாதனங்கள் பயன்படுத்துவது குறைவு, ஆசிரியர்களுக்கு வாண்மைத்துவ பயிற்சியின்மை, இவ்வாய்வின் ஊடாக அறியப்பட்ட முக்கிய விடயங்களாகும். இப்பிரதேச மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பாட வாண்மை ஆசிரியர்கள் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும் என்ற விதப்புரைகளும் முன் வைக்கப்படுகின்றது