Abstract:
இலங்கைக்கான வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் அந்நிய செலாவணி ஈட்டுநலின முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக சர்வதோ தொழிலாளர் இடம்பெயர்வு உள்ளது. பெற்றோர் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்கின்றமை காரணமாக பெற்றோர் பிள்ளை இடைத்தொடர்பு நலிவடைவதனால் பிள்ளைகள் கற்றலில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளை ஆராய்வதை இவ் ஆய்வு நோக்கமாக கொண்டுள்ளதோடு, விபரண பகுப்பாய்வு வடிவமைப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ் ஆய்விற்கான ஆய்வுப் பிரதேசமான மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்டத்திலுள்ள IAB, IC பாடசாலைகள் என 08 பாடசாலைகளும் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டன. இப்பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர்களிலிருந்து 40 ஆசிரியர்களும், ஆய்வுப் பிரச்சினைக்குட்பட்ட சிரேஸ்ட இடைநிலைப் பிரிவினைச் சேர்ந்த மாணவர்களுள் 21 எனும் அடிப்படையில் 120 மாணவர்களும், பாடசாலைக்கு அண்மையில் வசிக்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிலிருந்து ஒரு பாடசாலைக்கு 5 பேர் வீதம் 40 பேர் மற்றும் 08 பாடசாலைகளின் அதிபர்களும் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். பின்னர் படிமுறை எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் இறுதி மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டனர். ஆய்வுக் கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல் என்பன பயன்படுத்தப்பட்டன. இவற்றின் வாயிலாக பெறப்பட்ட அளவு ரீதியான மற்றும் பண்பு ரீதியான தகவல்கள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டன. தொழில் நிமித்தம் வெளிநாடு சென்ற பெரும்பாலான தந்தைகளின் வெளிநாடு செல்வதற்கான பிரதான காரணியாக தொழிலின்மை காணப்படுகின்றது. தங்களுடைய தேவைகள் நிறைவேற்றப்படுவதில்லை என்ற காரணத்தினால் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் பெற்றோர் வெளிநாடு செல்வதை விரும்பவில்லை. அதிக உளவியல் தாக்கங்களுக்கு உள்ளாகும் இம் மாணவர்கள் துரித உணவுகளை அதிகம் உண்பதால் உடல் ஆரோக்கியம் குன்றுவதோடு, நேர்தியற்றவர்களாவும் பாடசாலைக்கு வருகின்றனர். இம் மாணவர்கள் பாட இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் ஆர்வம் இன்மை, சுயகற்றல் இன்மை, ஆகிய பிரச்சினைகளுக்கு உட்படுவதனால் தாழ்ந்த அடைவுமட்டத்திலுள்ளனர். இவை பாடசாலை வருவதற்கான ஆர்வத்தினை குறைத்து இடைவிலகலிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது ஆகிய முடிவுகள் பகுப்பாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பெற்றோர் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் மனப்பாங்கினை மாற்றியமைத்து, பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிடல் வேண்டும். ஆசிரியர்கள் இவ்வாறான பிள்ளைகளை இனங்கண்டு பெற்றோருடன் கலந்துரையாடுவதோடு அவர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல் செயற்பாடுகளிலும் ஈடுபடல் ஆகிய விடயங்கள் விதந்துரைப்புகளாக முன்வைக்கப்பட்டுள்ளன